இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Friday, June 8, 2012

சிறுபான்மையினர் பகுதிகளில் முஸ்லிம் போலீஸ் அதிகாரி: மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்


 முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளின் காவல் நிலையங்களில் குறைந்தபட்சம் ஒரு முஸ்லிம் போலீஸ் அதிகாரியை நியமிக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. சச்சார் கமிட்டியின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு இவ்வாறு அறிவுறுத்தியுள்ளது.
 இது தொடர்பாக ஜூன் மாத இறுதிக்குள் அறிக்கை அளிக்குமாறு அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் மத்திய உள்துறை செயலர் ஆர்.கே.சிங் கடிதம் எழுதியுள்ளார்.
 சச்சார் கமிட்டியின் இந்த முக்கிய பரிந்துரையை பெரும்பாலான மாநில அரசுகள் இன்னும் நிறைவேற்றாததை அடுத்து இந்த கடிதத்தை அவர் எழுதியுள்ளார்.
 இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலை குறித்து அறிவதற்காக நீதிபதி ராஜிந்தர் சச்சார் தலைமையில் 2005 மார்ச் 9-ம் தேதி கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது.
 முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் போலீஸ் ஆய்வாளர் அல்லது உதவி ஆய்வாளராக ஒரு முஸ்லிம் அதிகாரியையாவது நியமிக்க வேண்டும் என்று சச்சார் கமிட்டி நவம்பர் 2006-ம் ஆண்டு சமர்ப்பித்த தனது அறிக்கையில் தெரிவித்தது.
 4 ஆண்டுகளுக்கு முன்பாக மாநில அரசுகளை இது தொடர்பாக மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் மாநில அரசுகளுக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. "கமிட்டியின் பரிந்துரையை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறும், அந்த நடவடிக்கைகள் தொடர்பாக உள்துறை அமைச்சகத்துக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை தெரியப்படுத்துமாறும்' அந்தக் கடிதத்தில் ஆர்.கே.சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
 சச்சார் கமிட்டியின் இந்த பரிந்துரையை அமல் செய்வதில் ஒழுங்கற்ற முறை நிலவுவதையடுத்து இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.
 கமிட்டியின் மற்ற பரிந்துரைகளை மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் தங்களது நிர்வாக எல்லைக்கு உட்பட்டு நிறைவேற்றி வருவதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
  
                                                                                            

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...