பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துக்களுக்கு 159 ரூபாய் மட்டும் வாடகை செலுத்தும் மேற்கு வங்காள அரசு... தொடரும் வக்ஃபு முறைகேடுகள்
பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் மதிப்புள்ள வக்ஃபு சொத்துக்களுக்கு மாதம் 159 ரூபாய் மட்டும் வாடகை கொடுக்கிறார்கள். இவர்கள் தாதாக்களோ, ஆதிக்க வெறிபிடித்த பண முதலைகளோ அல்ல. மேற்கு வங்காள மாநில அரசுதான் இத்தகைய சாதனைக்கு(?) சொந்தக்காரனாக விளங்குகிறது.
ஆளுநர் மாளிகையான ராஜ்பவன், தலைமைச் செயலகம் செயல்படும் வில்லியம்ஸ் கோட்டை, சீதாபூர் மதரஸா மற்றும் அதைச் சார்ந்த மைதானம் (ஹூக்ளி மாவட்டத்தில் உள்ளது), இவ்வாறு முக்கிய இடங்களை எல்லாம் ஆக்கிரமித்து மேற்கு வங்காள அரசு அற்பசொற்ப வாடகை கொடுத்து வந்தது நாட்டு மக்களை கொந்தளிப்பு அடையச் செய்துள்ளது.
2555 பிகாசாவுள்ள (511 ஏக்கர்) நிலத்திற்கு மாநில அரசு 159 ரூபாய் மட்டுமே மாத வாடகை செலுத்துகிறது. கேட்பதற்கே வேடிக்கையாக இருக்கிறதல்லவா?
இந்த 159 ரூபாய் மாத வாடகைக் கூட 1999ஆம் ஆண்டு வரைதான் கொடுத்து வந்தது. அதன்பிறகு அதனைக்கூட நிறுத்திவிட்டது. மேற்கூறப்பட்ட வக்ஃபு சொத்துக்களுக்கு முத்தவல்லியான மவ்லவி அபுல் பரகாத் தனது 99ஆம் வயதில் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரது வாரிசும் மகனுமான அபுநயீம் சித்தீக்கியிடம் ஒரு பைசாகூட அரசால் வழங்கப்படவில்லை.
கொல்கத்தாவின் பல்லாயிரம் கோடி வக்ஃபு சொத்துக்களின் முத்தவல்லி அபூநயீம் சித்தீக்கி...
வங்காளம், பீகார் மற்றும் ஒரிஸ்ஸா மாநிலங்களின் நவாபாக இருந்த நவாப் அலி வர்திகான், சீதாபூர் மஸ்ஜித் மற்றும் மதரஸாவைப் பராமரிக்கும் செலவு வகைக்காக மவ்லவி சம்சுத்தீன் மற்றும் மசியுத்தீன் ஆகிய இருவருக்கும் கொல்கத்தாவின் முக்கியப் பகுதிகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இந்த நிலங்களில் பிரம்மாண்டமான அரசு கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அதற்காக மிகப்பெரிய தொகையாக(?) 159 ரூபாய் வாடகையாக வழங்கப்பட்டுள்ளது.
எந்த மஸ்ஜித் மற்றும் மதரஸாவின் பராமரிப்புக்காக சொத்துக்கள் வழங்கப்பட்டதோ அந்த நோக்கம் பூர்த்தி செய்யப்படவில்லை. மதரஸாவும், மஸ்ஜிதும் பாழடைந்த நிலையில் உள்ளன என்பதுதான் பெரும் சோகம்.
வில்லியம் கோட்டை, ராஜ்பவன், புகழ்பெற்ற ஈடன் கார்டன் உள்ளிட்ட பானிபவான் மைதானம் முதலிய முக்கிய இடங்கள் அனைத்தும் தங்களது மூதாதையர்களின் சொத்துக்களே என பெருமிதத்துடன் கூறுகிறார். ஆனால் இவர்களது உரிமையை மறுத்து நியாயமான தொகையை வழங்க மறுத்து அரசுகள் வீண் பிடிவாதம் காட்டி வருவதாக வருந்துகிறார்.
வாரன் ஹேஸ்டிங்க்ஸ் காலம் தொடங்கி ஜவஹர்லால் நேரு தொடர்ந்து இந்திரா காந்தி, ஜோதிபாசு போன்றவர்களின் காலங்களில் கூட நியாயம் வழங்கப்படவில்லை.
சீதாபூர் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலம் 1772ஆம் ஆண்டு ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு மாதம் 158 ரூபாய் வாடகைத் தொகையாய் நிர்ணயம் செய்யப்பட்டதாக அபூநயீம் சித்தீக்கி கூறுகிறார். அதன்பிறகு ஒரு ரூபாய் மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. அடடா, என்ன நேர்மை? 17ஆம் நூற்றாண்டில் முர்ஷிதாபாத்துக்கு வருகை தந்த நவாப் அலி வர்திகான், ஹூக்ளி மாவட்டத்தில் 15 ஆயிரம் பிகா நிலமும் (3000 ஏக்கர்), ஹவுரா மற்றும் 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் 2555 பிகா நிலங்கள் (511 ஏக்கர்) வழங்கப்பட்டன. இன்று இவை அனைத்தும் கொல்கத்தா மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளின் முக்கிய சொத்துக்களாகத் திகழ்கின்றன. ஆனாலும் அநீதிகள் தொடர்கின்றன.
தனி நபர்கள் முறைகேடு செய்தால் அரசாங்கத்திடம் முறையிடலாம். அரசாங்கமே முறைகேடு செய்தால் எங்குபோய் முறையிடுவது? முறையான, நீதியான நிர்வாகம் பற்றி வாய்கிழியப் பேசும் மம்தா பானர்ஜி இதற்கு என்ன சொல்லப் போகிறார்?
No comments:
Post a Comment