இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Monday, June 18, 2012


காந்திக்கு தேசத்தந்தை பட்டம் சூட்டியது யார்? சிறுமியின் கேள்விக்கு திணறிய மத்திய அரசு


எந்தப் பெயருக்கும் செயலுக்கும் ஒரு காரணம் இருந்தே தீரும். ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை. இது திரைப்படப் பாடல் மட்டுமல்ல, நிகழ்கால வாழ்வின் நிதர்சன உண்மையும் அதுவே. கேள்விகள் கேட்கப்படுவதால்தான் தகுந்த பதில்கள், சால்ஜாப்பு பதில்கள், சவடால் பதில்கள், சமாளிப்பு பதில்கள், தருக்குப் பதில்கள், கிறுக்குப் பதில்கள் என பல்வேறு விதமான பதில்களைக் கேட்டு மனிதர்களின் தரம், தன்மை குறித்த மதிப்பீடுகளை அறிந்துகொள்ள முடிகிறது.
வரலாற்றின் தந்தை ஹெரோடோட்டஸ், பொருளியலின் தந்தை ஆடம் ஸ்மித், மருத்துவ இயலின் தந்தை ஹிப்போ கிரடிஸ், இதுபோன்ற பல்வேறு துறைகளுக்கும் தந்தை யார்? என்று கேள்வி கேட்கப்பட்டு மேற்குறிப் பிடப்பட்டவர்கள் எல்லாம் அத்துறைகளில் சாதனைப் படைத்தவர்களாக இருந்ததனாலும் முன்னோடிகளாக விளங்கியதாலும் அத்துறைகளின் தந்தை என துறைசார்ந்த நிபுணர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் சில கேள்விகளைக் கேட்கும்போது சுவாரசியமான, அதிர்ச்சி விடைகள் கிடைக்கும். அதுபோன்ற ஒரு கேள்வியைத்தான் லக்னோவைச் சேர்ந்த சிறுமி ஐஸ்வர்யா என்ற 6வது வகுப்பு படிக்கும் மாணவி கேட்டார்.
கேட்பதற்கு எளிதானக் கேள்விபோல் தோன்றலாம். இந்தியப் பிரதமர் அலுவலகமும் உள்துறை அமைச்சக அலுவலகமும், இந்திய தேசிய ஆவணக் காப்பகமும் திக்கித் திணறி மயங்கி, கிறங்கி, விட்டால் போதும் என ஓட்டம் பிடிக்கும் நிலைக்கு அப்படி என்னதான் கேள்வி கேட்டாள் அந்த பச்சிளம் சிறுமி. 1) காந்தி தேசத்தந்தை ஆனது எப்போது? 2) காந்திக்கு தேசத்தந்தை எனப் பெயர் சூட்டியது யார்? இந்த இரண்டு கேள்விகளைத்தான் மாணவி ஐஸ்வர்யா கேட்டாள்.
காந்தி பாசத்தந்தை ஆனக் கதை அவரது மூத்த மகன் பிறந்தபொழுது. ஆனால் தேசத்தந்தை ஆன கதை யாருக்கும் தெரியவில்லை என்பது தான் கொஞ்சம் சுவாரசியமான சோகம். இதே கேள்வியை மாணவி ஐஸ்வர்யா முதலில் தனது பள்ளிக்கூட ஆசிரியையிடம்தான் கேட்டாள். பாவம் பள்ளிக்கூடத்தில் யாருக்கும் தெரியவில்லை. பெற்றோருக்கும் தெரியவில்லை.
எல்லாவகையான கேள்விகளுக்கும் வகை வகையாய் விடைகளை பந்திபோல் வலை தளத்தில் வைத்துப் பரிமாறும் கூகுள் இணையதளத்திற்கும் கூட இதற்கான விடை தெரியவில்லை.
ஐஸ்வர்யா

அப்புறம் என்ன? இருக்கவே இருக்கிறது தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) அதன் வாயிலாக பிரதமர் அலுவலகத்தை அணுகினார். பிரதமர் அலுவலகத்திற்கும் ஐஸ்வர்யாவின் வினாவுக்கு விடை அளிக்க முடியவில்லை. பாவம் பிரதமர்! அவரது அலுவலகத்தாரும் என்னதான் செய்வார்கள்?
ஒய் திஸ் கொலைவெறி என்ற ஆக்கப்பூர்வமும்(?) அறிவாற்றலும்(?) மிகுந்த திரைப்பாடலைப் பாடிய தனுஷ் என்ற சமூகப்போராளி(?)க்கு விருந்து கொடுப்பதில் ஈடுபாடு காட்டும் பிரதமர் அலுவலகத்திற்கு இதுபோன்ற சின்னபுள்ளத்தனமான கேள்விக்கு விடை தெரியுமா என்ன? வினா, சத்தம் இல்லாமல் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப் பப்படுகிறது.
இங்குதான் ஒருவர் கொஞ்சமும் சளைக்காமல் தன்னை நோக்கி வீசப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் எப்படி பதில் சொன்னால் மாட்டிக்கொள்ள முடியுமோ அப்படி பதில் சொல்லும் ஒருவர் இருக்கிறார் என நினைத்ததோ என்னவோ? ஐஸ்வர்யாவின் கேள்வி பிரதமர் அலுவலகத்திலிருந்து உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறுதியில் தேசிய தகவல் பதிவகத்திற்கு அனுப்பப்படுகிறது. ஊருக்கெல்லாம் தகவல்களை அள்ளி வழங்கும் தேசிய பதிவகத்திற்குகூட இதற்கு விடை தெரியவில்லை.
தங்களிடம் இதுதொடர்பான எவ்வித ஆவணப்பூர்வ ஆதாரங்களும் இல்லை என தேசிய தகவல் பதிவகம் தெரிவித்ததோடு ஐஸ்வர்யாவுக்கு ஏதாவது தகவல்கள் கிடைத்தால் அதனை வைத்து ஆய்வுகளை மேற்கொள் ளுமாறு (அடேங்கப்பா) அந்த சிறுமிக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதிலிருந்து முக்கியப் பிரமுகர்களுக்கு வழங்கப்படும் பட்டங்கள் எல்லாம் இதைப்போன்ற குபீர் சிரிப்புக் கதைகளைக் கொண்டதாகத்தான் இருக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இதுபோன்ற நிகழ்வுகள் அமைகின்றன.
ஹிந்தி தேசிய மொழி என்பதும், இந்த தேசத்தின் பெரும்பான்மை மக்களின் சமயம் ஹிந்து மதம் என்பது போன்ற தகவல்கள் இதுபோன்ற வகையைச் சார்ந்தவைதான் போலிருக்கிறது.
ஐஸ்வர்யாவைப் போன்ற துடிப்புமிக்க குழந்தைகள் இந்தியா முழுவதும் எழுந்து இதுபோன்ற வினாக்களை எழுப்ப வேண்டும். காந்தியடிகளைக் குறிப்பிட்ட பட்டம் வைத்து அழைத்துத்தான் அவரை பெருமைப்படுத்த வேண்டும் என்பதில்லை. காந்தியார் தன் வாழ்நாளின் போதே தன் மீது நேசம் காட்டிய கோடிக்கணக்கான மக்களைக் கண்டு மகிழ்ந்தார். அவருக்குப் பட்டங்கள் வழங்குவது என்பதெல்லாம் சமுத்திரத்துக்கு பிரேம் போட்டு புகைப்படமாகத் தொங்கவிடலாம் என நினைப்பது போன்ற அபத்தம்தானே தவிர வேறொன்றும் இல்லை.
அதுசரி. மக்கள் உணர்ச்சி மிகுதியில் அள்ளி வழங்கும் பட்டங்களின் பூர்வீகத்தை ஆராயப் புகுந்தால் அதிர்ச்சி குண்டுகளும் அநியாயக் காமெடிக் காட்சிகளும் வெளிப்படுமோ!

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...