இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Saturday, March 31, 2012

திசை மாறும் ஊடகங்கள்

ஊடகங்கள் பொழுதுபோக்கு அம்சங்களை மட்டுமே கவரேஜ் செய்கின்றன. நாட்டின் எரியும் பிரச்சனைகளை மக்களிடையே கொண்டு செல்லும் பொறுப்பினை தட்டிக் கழித்துவிட்டு விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களைப் பற்றிய விஷயங்களைப் பரப்புவதில் அதீத ஆர்வம் காட்டும் செயலை பிரஸ் கவுன்சிலின் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு வன்மையாகக் கண்டித்துள்ளார்.

சமூகநல ஆர்வலர்கள், நடுநிலையாளர்கள் மக்கள் நலன் நாடும் அமைப்புகளையெல்லாம் தொடர்ந்து கூறிவந்த கருத்தை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பணியினை சிறப்பாக வகித்த மார்க்கண்டேய கட்ஜு கூறியிருப்பது பொருத்தமானது. வணிகநோக்கு ஊடகங்களால் தூக்கிப் பிடிக்கப்படும் அன்னா ஹசாரே ஊழலை ஒழிக்க அறிவியல் பூர்வமான எந்தத் தீர்வையும் அவரால் சொல்ல முடியவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். 'பாரத் மாதா கி ஜே’ என்று முழக்கமிடுவதாலும், வெறும் 15 நாட்கள் போராடினால் மட்டும் ஊழலை ஒழித்துவிட முடியாது எனக்கூறிய கட்ஜு,

"நாட்டில் எரியும் பிரச்சனைகள், வேலையில்லா திண்டாட்டம், ஏழ்மை என எவ்வளவோ இருக்க ஐஸ்வர்யா ராய் எப்போது குழந்தை பெறுவார், சச்சின் டெண்டல்கர் எப்போது சதம் அடிப்பார் என்பது போன்ற அறிவுப்பூர்வமான(?) விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைச் சாடினார். டெண்டுல்கர் சதம் அடிப்பதால் பாலாறும் தேனாறும் ஓடப்போகிறதா?"

என்று குத்தலாகக் கேட்டார்.



நாட்டின் 90 சதவீத ஊடகங்கள் இத்தகையப் போக்கினையே கடைப்பிடிப்பதை எவ்வளவு நாள்தான் சகித்துக் கொண்டிருப்பது என்ற வினாவினை நாட்டு மக்கள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். மார்க்கண்டேய கட்ஜு போன்ற நடுநிலையோடு செயல்படும் சான்றோர்களின் கருத்துக்கள் இப்போது தேசிய அளவில் முக்கியத்துவம் பெறுகின்றன. நாட்டு மக்களின் மனநிலையை, பொதுப்புத்தியை வடிவமைக்க நினைக்கும் வணிகநோக்கு ஊடகங்களின் எண்ணம் இனிவரும் காலத்தில் நிறைவேறாது என்பது திண்ணம்.

மக்களின் விழிப்புணர்வு பற்றிப்பரவத் தொடங்கி யதால் செயற்கையான பரபரப்பு விரைவில் மறையத் தொடங்கும்

Thursday, March 29, 2012

பிரதமருடன் முஸ்லிம் எம்.பி.க்கள் சந்திப்பு.

மூத்த பத்திரிக்கையாளர் செய்யது முஹம்மது காஸிமி டெல்லி காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்டு வருகிறார். காஸிமியின் வழக்கறிஞர் விஜய் அகர்வால் நீதிபதியிடம் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, காஸிமிக்கு குடிக்க தண்ணீர் கூட ஒழுங்காகக் கொடுப்பதில்லை. அவருக்கு கொடுக்கும் உணவில் அதிக உப்பு சேர்க்கப்பட்டுள்ளது.அவரை விசாரணை என்ற பெயரில் தூங்க விடுவதில்லை. அவர் செய்யாதக் குற்றத்தை ஒப்புக்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார். இஸ்ரேலிய தூதரக காரில் வைக்கப்பட்ட காந்தக குண்டுவெடிப்பு வழக்கு என்பதால் இஸ்ரேலிய உளவுப் பிரிவான மொஸாத் பிரிவினரும் விசாரிக்கின்றனர். இந்த விசாரணையில் பல்வேறு வகையான முறையில் காசிமி சித்திரவதை செய்யப்படுகிறார் என்று வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையின் செயலைக் கண்டித்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, மூத்த பத்திரிக்கையாளர் காஸிமிக்கு இழைக்கப்படும் கொடுமைகளை ஆதாரத்துடன் விளக்கினர். எந்தவித ஆதாரமும் இல்லாமல் அப்பாவி முஸ்லிம் பத்திரிக்கையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் முஸ்லிம் எம்.பி.க்கள் பிரதமரிடம் கோரிக்கை வைத்தனர். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் மன்மோகன்சிங் குறிப்பிடுகையில், இதுபோன்ற செயல் கவலை அளிப்பதாக குறிப்பிட்டு, இதுகுறித்து உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் விசாரிப்பதாகவும் கூறியுள்ளார். மத்திய அமைச்சர் சுல்தான் அஹமது எம்.பி. உட்பட பத்து எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.

மூத்த பத்திரிக்கையாளருக்கே இந்த நிலையென்றால் சாதாரண பாமர முஸ்லிம்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு இந்த சம்பவம் மிகப்பெரிய சான்றாக உள்ளது.

Sunday, March 25, 2012

இராமநாதபுரம் மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக ரயில்வே துறையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்


இராமநாதபுரம் மாவட்ட மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக தொடர்ந்து இராமநாதபுரத்தை புறக்கணித்து வரும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கீழ்வரும் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இராமநாதபுரம் சட்மன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.ஹெச்.ஜவாஹிருல்லா அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் அரண்மனையில் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் த.மு.மு.க. மாநில செயலாளர் சலிமுல்லாகான், ம.ம.க மாநில அமைப்பு செயலாளர் மதுரை மைதீன், மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா, மாவட்ட செயலாளர் தஸ்பிக் அலி, த.மு.மு.க மாவட்ட செயலாளர் அன்வர் அலி, மாவட்ட பொருளாளர் வாணி சித்திக் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், வர்த்தக சங்க அமைப்புகள், பொதுநலஅமைப்புகள் கலந்து கொண்டனா;.

கோரிக்கை:

1) மதுரை - ராமேஸ்வரம் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும்.

2) மதுரை - ராமேஸ்வரம் இடையே கூடுதல் ரயில் சேவை வேண்டும்.

3) திருச்சி - ராமேஸ்வரம் இடையே கூடுதல் ரயில் சேவை வேண்டும்.

4) காரைக்குடி - கன்னியாகுமரி இடையே இராமநாதபுரம் வழியாக புதிய வழித்தடம்

5) ராமநாதபுரம் வந்துசேரும் சென்னை விரைவு ரயில் காலை 5 முதல் 8 மணிக்குள் வந்து சேரவேண்டும்.

6) சென்னை விரைவு ரயில்களை உச்சப்புளி ரயில்நிலையத்தில் நிறுத்துதல்.

7) சென்னை - ராமேஸ்வரம் இடையே சூப்பர் பாஸ்ட் வண்டியை பகல் நேரத்தில் விடுதல்

8) ராமேஸ்வரம் முதல் கோவை வரை ரயில் சேவை வேண்டும்.


ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்;.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சுமார் 500க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.




Thanks : tmmk.in

Thursday, March 22, 2012

புனிதப் பயணம் வந்த தமிழகப் பெண்கள் சவூதியில் பரிதவிப்பு.

மயிலாடுதுறை மற்றும் தஞ்சைப் பகுதியைச் சார்ந்தோர் ஒரு குழுவாக, சவூதி அரேபியாவில் உள்ள மக்காவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்டனர், மஹ்தியா ஹஜ் சர்வீஸ் என்ற பயண ஏற்பாட்டு நிறுவனம் இவர்களை மக்காவிற்கு அழைத்துச் சென்றது.

புனிதப்பயணமாக சவூதி அரேபியாவிற்குச் செல்லும் பெண்கள் இஸ்லாமிய வரம்புக்குட்பட்ட , தக்க துணையின்றிப் பயணம் செய்ய அந்நாட்டுச் சட்டம் அனுமதிப்பதில்லை.இந்நிலையில் மஹ்தியா நிறுவனம் மூலம் மக்காவுக்குச் சென்ற மயிலாடுதுறைப் பகுதியைச் சேர்ந்தத நான்கு பெண்மணிகள் திரும்பவும் இந்தியாவுக்கு வருவதற்குரிய தக்க துணையை இந்நிறுவனம் ஏற்பாடு செய்யவில்லை. இதை அறியாத இவர்கள் இந்தியாவிற்குத் திரும்புவதற்காக ஜித்தா விமான நிலையம் சென்றபோது விமான நிலையத்தில் அதிகாரிகள் இவர்களைத் தனியாகப் பயணம் செய்ய அனுமதிக்கவில்லை.இரு முறை முயன்றும் இப் பெண்மணிகள் நாடு திரும்ப அனுமதிக்காமல், மக்காவிற்கே திருப்பி அனுப்பப் பட்டனர்.

இந்தத் தகவல் அறிந்த முன்னாள் தமிழக வக்புவாரியத் தலைவர் ஹைதர் அலி ஜித்தா தமிழ்சங்கத்தைச் சேர்ந்த ரஃபியா மற்றும் முகமது சிராஜுதீன் ஆகியோரைத் தொடர்பு கொண்டார்.இவர்களின் முயற்சியால் ஜித்தாவில் உள்ள இந்தியத் தூதரகத்துக்குத் தகவல் அனுப்பப்பட்டது. இந்த வாரத்துக்குள் இந்த நான்கு பெண்மணிகளையும் இந்தியாவுக்கு அனுப்ப முடியும் என்று தெரிய வருகிறது.

Wednesday, March 21, 2012

பாஸ்போர்ட் சேவை மையத்தில் ஹஜ் பயணிகளுக்காக மார்ச் 24-ல் சிறப்பு முகாம்

தஞ்சாவூர் பாஸ்போர்ட் சேவை மையத்தில் (பி.எஸ்.கே.) ஹஜ் பயணிகள் பாஸ்போர்ட் பெறும் வகையிலான ஹஜ் மேளா என்ற சிறப்பு முகாம் வருகிற 24-ம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் கே. பாலமுருகன் தெரிவித்திருப்பது:

ஹஜ் யாத்திரை செல்லும் பாஸ்போர்ட் இல்லாத யாத்ரீகர்கள் பாஸ்போர்ட் பெற வசதி ஏற்படுத்தி தரும் வகையில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் ஹஜ் மேளா மார்ச் 24-ம் தேதி நடத்தப்படவுள்ளது. இந்த மேளா அன்று காலை 9.30 மணிக்கு தொடங்கவுள்ளது.இந்த மேளாவில் பங்கேற்கவுள்ள யாத்ரீகர்கள் இணையவழி மூலம் விண்ணப்பம் செய்து, விண்ணப்பப் பதிவு எண் நகலுடன் வர வேண்டும். மேலும், பாஸ்போர்ட்டுக்குத் தேவையான நகல், அசல் ஆவணங்களுடனும் வர வேண்டும். பாஸ்போர்ட் பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 1,000. முன்பதிவு தேவையில்லை என்றார் அவர்.

Saturday, March 10, 2012

கலாச்சார சீரழிவு அதிகரித்து வருகிறது-தமுமுக கவலை


சவுதி அரேபியா கிழக்கு மண்டல தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக அல்ஹஸா நகர புதிய நிர்வாகிகள் தேர்தல் மற்றும், “நமது இல்லங்களில் இஸ்லாம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் அல்ஹஸா நகரில் நடைபெற்றது.அல்ஹஸா மாநகர தமுமுக தலைவர் அஹமது சுகர்னோ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அல்ஹஸா, மாநகர தமுமுக பொருளாளர் ஜெக்கரிய்யா வரவேற்புரையாற்றினார்.இக்கூட்டத்தில் சவுதி அரேபியா கிழக்கு மண்டல தமுமுக துணைத்தலைவரும், ஊடகத்துறை பொறுப்பாளருமான அப்துல் காதர், பொதுச்செயலாளர் இஸ்மாயில், பொருளாளர் நஸ்ருத்தீன் சாலிஹ், துணைச் செயலாளர் அப்துல் அலீம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்இரு அமர்வுகளாக நடைபெற்ற இக்கூட்டத்தில் முதல் அமர்வில் “நமது இல்லங்களில் இஸ்லாம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மவ்லவி பின்னத்தூர் அப்துல் ஹக் ஜமாலி தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.மவ்லவி பின்னத்தூர் அப்துல் ஹக் ஜமாலி தனது தலைமையுரையில் “கலாச்சார சீரழிவு தற்போது சமூகத்தில் அதிகரித்து வருகிறது. இப்போக்கு கவலையளிக்கிறது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு இஸ்லாம் கூறும் ஒழுக்கவியல் மாண்புகளை எடுத்து சொல்லி வளர்க்க வேண்டும். இதற்கு வெளிநாட்டில் இருக்கும் பெற்றோர்கள் தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.வெள்ளிக்கிழமை சிறப்பு பேருரையினை மவ்லவி பின்னத்தூர் அப்துல் ஹக் ஜமாலி நிகழ்த்தினார். தொழுகை – உணவு இடைவேளைக்கு பின்னர் கூடிய இரண்டாம் அமர்வில் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் அதிகாரியாக மண்டல துணைத்தலைவர் அப்துல் காதர் பணியாற்றினார்.தலைவர் பதவிக்கு அஹமது சுகர்னோ மட்டுமே முன்மொழியப்பட்டதால், அஹமது சுகர்னோ மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவர்களாக ஜெக்கரிய்யா(தமுமுக), பரக்கத்துல்லாஹ்(மமக),, செயலாளர்களாக லால்பேட்டை அமானுல்லாஹ்(தமுமுக) ஆவனியாபுரம் ஷஹாபுதீன்(மமக), பொருளாளராக அன்வர், துணைச்செயலாளர்களாக ராஜகெம்பீரம் சிக்கந்தர் பாட்சா, கபீர், அப்துல் ஹக்கீம், ஆகியோர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.பின்னர் தமிழகத்திலிருந்து அலைப்பேசி வழியாக மமக பொதுச்செயலாளார் தமீமுன் அன்சாரி உரையாற்றினார். மண்டல நிர்வாகிகள் உரை, மற்றும் உறுப்பினர்கள் கலந்துரையாடலுக்கு பின்னர் கூட்டம் நிறைவு பெற்றது.இறுதியாக அல்ஹஸா மாநகர தமுமுக துணைச்செயலாளர் ராஜகெம்பீரம் சிக்கந்தர் பாட்சா நன்றியுரையாற்றினர்..கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தமுமுக மாநகர தலைவர் அஹமது சுகர்னோ தலைமையில் ஆவனியாபுரம் ஷஹாபுதீன், கந்தகுமாரன் அமானுல்லாஹ், கோட்டக்குப்பம் அப்துல் ரஹ்மான், பின்னத்தூர் ரபி, பரங்கிப்பேட்டை பாரூக் ராஜா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
நன்றி:- இந்நேரம்.காம்

Sunday, March 4, 2012

அசினா பர்வீன்... நெகிழ வைத்த பிஞ்சு!


''எனக்கு சைக்கிள் வாங்கணும்னு ரொம்ப ஆசை. அதுக்காக கொஞ்சம் கொஞ்சமா காசு சேர்த்து வெச்சிருந்தேன். ஆனா, கடலூர் மக்கள் புயல்ல பாதிக்கப் பட்டு இருக்காங்கன்னு அப்பா சொன்னதும் மனசு ரொம்ப கஷ்டமாயிருச்சு. அதான் நான் சேர்த்துவெச்ச காசை அவங்களுக்குக் கொடுக்கலாம்னு வந்தேன்!'' என்று சொல்லி இரண்டு உண்டியல்களுடன் விகடன் அலுவலகத்துக்கு வந்து நின்றாள் அசினா பர்வீன். அதில் சைக்கிள் வாங்குவதற்காக அவள் சேர்த்துவைத்திருந்த ரூ.3,052 சில்லறைகளாகச் சிரித்தன. விகடனின் 'தானே’ துயர் துடைப்புப் பணிகளுக்கு அந்தத் தொகையைக் கொடுத்துச் சென்றாள் அச்சிறுமி. (இதுபற்றிய செய்தி 26.2.2012 தேதியிட்ட ஜூ.வி. இதழில் வெளியாகி இருந்தது!) 'தானே' துயர் துடைக்க.. நீளட்டும் நம் கரங்கள்! 'சைக்கிள் வாங்க வைத்திருந்தேன்!'' நம்முடைய அலுவலகத்துக்கு இரண்டு உண்டியல்களுடன் வந்திருந்தார் அஸினா பர்வீன் என்ற சிறுமி. அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இவர் அந்த உண்டியல்களை நம்மிடம் கொடுத்து, 'கடலூர் பகுதி மக்களுக்காக என்னுடைய உதவி இது. எனக்கு சைக்கிள் வாங்கணும்னு ரொம்ப ஆசை. அதுக்காக சேர்த்து வெச்சிருந்தேன். ஆனா, கடலூர் விஷயத்தைக் கேள்விப்பட்டதும் உடனே அவங்களுக்குக் கொடுக்கத் தோணுச்சு'' என்று கொடுத்தார். எண்ணிப் பார்த்தால் மொத்தம் 3,052 ரூபாய் இருந்தது. அஸினாவின் கருணைக்கு விலை ஏது! ஜூனியர் விகடன், 26.02.2012 அந்தப் பிஞ்சு மனதின் தியாகம் ஏகமான வாசகர்களை நெகிழ வைத்து இருந்தது. இந்த நிலையில் தனது கனவைக் கலைத்து 'தானே’ நிவாரணத்துக்கு நிதி அளித்த அசினாவின் கனவை நிறைவேற்றி இருக்கிறது டி.ஐ.சைக்கிள்ஸ் ஆஃப் இண்டியா’ (பி.எஸ்.ஏ. ஹெர்குலிஸ்) நிறுவனம்!அசினாவின் நன்கொடைச் செய்தியைப் படித்து விட்டு நம்மைத் தொடர்புகொண்ட அந்த நிறுவனத்தின் இணை விற்பனை மேலாளர் கனகராஜ், ''அசினா எங்கள் ஷோரூமுக்கு வந்து தனக்குப் பிடித்த மாடல் சைக்கிளைத் தேர்ந்தெடுக்கட்டும். அதை அவளுக்கு இலவசமா வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இது அசினாவின் பரந்த மனசுக்கு எங்களுடைய சின்ன பரிசு!'' என்றார். பாடி பி.எஸ்.ஏ. சைக்கிள் ஷோரூமில் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு இருந்த மிதிவண்டிகளை ரசித்துக்கொண்டே வந்தவள், பிங்க் நிற 'லேடி பேர்டு’ சைக்கிள் மீது கை வைத்து நின்றாள். கண்களில் ஆர்வமும் தயக்கமும் ஒருசேர மின்னின. ''இந்த சைக்கிள் பிடிச்சிருக்கா?'' என்று கேட்டதும் சின்னப் புன்னகையால் ஆமோதித்தாள். சைக்கிளில் ஏறி அமர்ந்ததும் சிட்டாகப் பறக்கத் தொடங்கி விட்டாள் அசினா. குறுகலான வீதிகளுக்குள் சர்..சர் என சைக்கிள் விட்டுக் கொண்டு இருந்த மகளைப் பூரிப்பாக பார்த்துக் கொண்டே பேசினார் அசினாவின் தாய் பாத்திமுத்து. ''முன்னாடியே இவ 750 ரூவா வரை உண்டியல்ல சேர்த்துவெச்சிருந்தா. குடும்பக் கஷ்டத்துல அந்த உண்டியலை உடைச்சுதான் சமாளிச்சோம். இவங்க அப்பா விகடன் வாசகர். விகடன் 'தானே’ துயர் துடைப்புப் பணிக்காக இவர் ஒவ்வொருத்தர் கிட்டயும் கையேந்துனார். அப்போ இவகிட்ட சும்மா விளையாட்டா கேட்டார். 'எதுக்கு’ன்னு விசாரிச்சா. விஷயத்தைச் சொன்னதும் உடனே இவ உண்டியலை எடுத்துக் கொடுத்துட்டா. இந்தச் சின்ன வயசுல இப்படி ஒரு நல்ல குணத்தை அல்லா இவளுக்குக் கொடுத்திருக்காரேன்னு சந்தோஷமா இருக்கு!'' நன்றி: ஆனந்த விகடன் 07 மார்ச்

Thursday, March 1, 2012

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு புகைப்படம் எடுத்துக்கொள்ள அழைப்பு

தஞ்சாவூர், பிப். 28: முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடைய பயனாளிகள் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சென்ற முறை புகைப்படம் எடுக்கத் தவறியவர்களுக்கு மட்டும் புகைப்படம் எடுக்கும் பணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்.தகுதியுடைய பயனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதற்கென அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தில் தங்களது குடும்ப அட்டையுடன் நேரில் வந்து விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம்.விண்ணப்பப் படிவத்தை நிறைவு செய்து கிராம நிர்வாக அலுவலரிடம் கையொப்பம் பெற்று குடும்ப உறுப்பினர்கள் அனைவருடன் நேரில் வந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். இந்தச் சிறப்பு மையம் ஞாயிறு தவிர அனைத்து நாள்களிலும் அலுவலக நேரத்தில் இயங்கும். முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்தினரும் ஓர் ஆண்டுக்கு ரூ. ஒரு லட்சம் வரை மருத்துவச் சிகிச்சை பெறலாம்.இந்தத் திட்டத்தின் கீழ் இருதயம், சிறுநீரகம், நரம்பு, நுரையீரல், எலும்பு, மூட்டு, குடல் உள்ளிட்ட 1016 வகையான நோய்களுக்கு அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு வகையான உயர்தர சிகிச்சைகளை சிறந்த மருத்துவமனைகளில் பெற்றுக் கொள்ளலாம்.தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் 13 மருத்துவமனைகள் செயல்படுகின்றன. மேலும், விவரங்களுக்கு 1800 425 3993 என்ற 24 மணி நேர கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்புக் கொண்டு தகவல்களை அறிந்துக் கொள்ளலாம் என்றார் அவர்.

நன்றி: திணமணி செய்தி 01-Mar-2012

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...