தஞ்சாவூர், பிப். 28: முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடைய பயனாளிகள் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சென்ற முறை புகைப்படம் எடுக்கத் தவறியவர்களுக்கு மட்டும் புகைப்படம் எடுக்கும் பணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்.தகுதியுடைய பயனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதற்கென அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தில் தங்களது குடும்ப அட்டையுடன் நேரில் வந்து விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம்.விண்ணப்பப் படிவத்தை நிறைவு செய்து கிராம நிர்வாக அலுவலரிடம் கையொப்பம் பெற்று குடும்ப உறுப்பினர்கள் அனைவருடன் நேரில் வந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். இந்தச் சிறப்பு மையம் ஞாயிறு தவிர அனைத்து நாள்களிலும் அலுவலக நேரத்தில் இயங்கும். முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்தினரும் ஓர் ஆண்டுக்கு ரூ. ஒரு லட்சம் வரை மருத்துவச் சிகிச்சை பெறலாம்.இந்தத் திட்டத்தின் கீழ் இருதயம், சிறுநீரகம், நரம்பு, நுரையீரல், எலும்பு, மூட்டு, குடல் உள்ளிட்ட 1016 வகையான நோய்களுக்கு அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு வகையான உயர்தர சிகிச்சைகளை சிறந்த மருத்துவமனைகளில் பெற்றுக் கொள்ளலாம்.தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் 13 மருத்துவமனைகள் செயல்படுகின்றன. மேலும், விவரங்களுக்கு 1800 425 3993 என்ற 24 மணி நேர கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்புக் கொண்டு தகவல்களை அறிந்துக் கொள்ளலாம் என்றார் அவர்.
நன்றி: திணமணி செய்தி 01-Mar-2012
No comments:
Post a Comment