ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரணப் முகர்ஜி அறிவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் தலைமையில் இன்று நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
நாட்டின் முதல் குடிமகனுக்கான போட்டியில் முன்னணியில் உள்ள பிரணப் முகர்ஜியின் கடந்த கால வாழ்க்கை
மேற்குவங்க மாநிலம் Birbhum மாவட்டத்தில் Mirati என்ற இடத்தில் சுதந்திர போராட்ட வீரரான Kamada Kinkar Mukherjee – Rajlakshmi தம்பதியருக்கு 1935ம் ஆண்டு பிறந்தார் பிரணப் முகர்ஜி. சிறு வயதிலேயே அரசியலில் ஆர்வம் கொண்ட இவர் வரலாறு, அரசியல் ஆகிய இரண்டிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவர் சட்டமும் பயின்றுள்ளார். ஆசிரியர், பத்திரிகையாளர், எழுத்தாளர் என பன்முகங்களைக் கொண்டவர் பிரணப். தமது 22வது வயதில் Suvra Mukharjee-ஐ மணந்த இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
தந்தையின் மறைவுக்குப் பின் 1960களில் அரசியலில் நுழைந்த பிரணப், 1969ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக முதன் முறையாக நாடாளுமன்றத்தில் நுழைந்தார். 1975, 1981, 1993, 1999 ஆகிய ஆண்டுகளில் மாநிலங்களவைக்கும், 2004, 2009ம் ஆண்டுகளில் மக்களவைககும் தேர்வானார் பிரணப் முகர்ஜி. மாநிலங்களவையிலும், மக்களவையிலும் அவை முன்னவராக பணியாற்றிய அனுபவம் வாய்ந்த பிரணப், காங்கிரஸ் கட்சியிலும் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். 2000வது ஆண்டு முதல் மேற்குவங்க காங்கிரஸ் தலைவராகவும், 2004ம் ஆண்டு முதல் மக்களவையின் அவைத்தலைவராகவும் நீடிக்கிறார் பிரணப் முகர்ஜி.
1973ம் ஆண்டு பிரதமர் இந்திராகாந்தியின் அமைச்சரவையில் தொழில் வளர்ச்சித்துறை துணையமைச்சராக பொறுப்பேற்றது முதலே நேரு குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவராக பிரணப் இருந்து வருகிறார். 1980இல் கேபினட் அமைச்சர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட பிரணப், நிதி, வர்த்தகம், வெளியுறவு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளையும் திறம்பட நிர்வகித்துள்ளார். 1980-களில் நிதியமைச்சராக இருந்த போது, அவரால் ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டவர்தான் தற்போதைய பிரதமர் மன்மோகன்சிங். திட்டக்குழு துணைத் தலைவராக 1991 முதல் 1996ம் ஆண்டு வரை இவர் பதவி வகித்துள்ளார். சர்வதேச நிதியம், உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, ஆப்ரிக்க வளர்ச்சி வங்கி போன்ற சர்வதேச அமைப்புகளிலும் பல்வேறு முக்கிய பொறுப்புகளை ஏற்று சிறப்பாக பணியாற்றியுள்ளார் பிரணப் முகர்ஜி.
அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல், 2004ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்றது முதல் மத்திய அரசின் அச்சாணியாக திகழ்கிறார் பிரணப் முகர்ஜி. அரசியல், பொருளாதார விவகாரங்களில் வித்தகரான பிரணப் ஆட்சியிலும், நிர்வாகத்திலும் ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்து வைத்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு சர்வரோக நிவாரணியாக செயல்படுகிறார். தாம் ஏற்ற அனைத்து பொறுப்புகளிலும் திறம்பட செயல்பட்டு அந்த பதவிகளுக்கு பெருமை சேர்த்த பிரணப் முகர்ஜி, நாட்டின் முதல் குடிமகனாவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது.
No comments:
Post a Comment