மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்தேன் சி.பி.எஸ்.சி. தேர்வில் முதலிடம் பிடித்த மாணவன் முஹம்மது
இஸ்மத்
முஹம்மது இஸ்மத், மணிப்பூரைச் சேர்ந்த மாணவர். அகில இந்திய பள்ளி கல்வித் தேர்வான சி.பி.எஸ்.இன் 12ஆம் வகுப்பு தேர்வில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்றுள்ளார். இவர், எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றி நாட்டுக்கும்; மக்களுக்கும் சேவை செய்வதே தனது எதிர்கால லட்சியம் என தெரிவித்துள்ளார். மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரம் உள்ள தவ்பல் மாவட்டத்தில் லைலாங் ஹையோரபி என்ற குக்கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த முஹம்மது இஸ்மத்தின் வீட்டில் மின்சார வசதி கிடையாது.
ஐ.ஏ.எஸ். தேர்விலும் இந்தியாவிலேயே முதலாவதாக தேர்வாவது தனது லட்சியம் என்று கூறிய இஸ்மத், அந்தப் பதவியின் மூலம் நாட்டு மக்களின் அமைதி மற்றும் சமாதானத்திற்காகப் பாடுபடுவேன் என்கிறார். புதுடெல்லியின் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் இளங்கலை அறிவியலில் (இயற்பியல்) சேர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இஸ்மத் 18 மாத குழந்தையாக இருக்கும் போதே அவரது தாயார் இறந்துவிட்டார்.
இஸ்மத்தின் தந்தையார் மவ்லவி பசியுர் ரஹ்மான் ஆரம்ப பள்ளிக்கூட ஆசிரியராகவே பணியாற்றி தனது ஏழு குழந்தைகளையும் வளர்த்து வந்தார். ஆறு பெண் குழந்தைகளுக்குப் பின்னர் கடைக்குட்டி ஆண் குழந்தையாய் பிறந்தார் முகமது இஸ்மத். வறுமையிலும் செம்மை பேரணி ஆறு பெண்களை பட்டதாரிகளாக்கினார் மவ்லவி பசியுர் ரஹ்மான். வீட்டில் மின்சாரம் இல்லாத நிலையில் மெழுகுவார்த்தி வெளிச்சத்தில் படித்த முஹமது இஸ்மத், சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பில் 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடம் பெற்றார். கணிதம், வேதியியல், ஃபைன் ஆர்ட்ஸ் மற்றும் ஹோம்சயின்ஸ் பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 98 மதிப்பெண்μம், இயற்பியலில் 97 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தினமும் எட்டு மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரம் வரை படித்து தேசிய அளவில் முதலிடம் பிடித்த முஹமது இஸ்மத் மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துவோம்.
No comments:
Post a Comment