இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Saturday, June 16, 2012


மதச்சார்பற்ற இராணுவம்

பிறந்த நாள் சர்ச்சையில் சிக்கித் தவித்த ராணுவத் தலைமைத் தளபதி வி.கே. சிங்கின் பதவிக் காலம் நிறைவடைந்ததால் புதிய தலைமைத் தளபதியாக பொறுப் பேற்றுக் கொண்ட நாட்டிற்கு மிகமுக்கியமானதொரு செய்தியைக் கூறினார். இந்திய ராணுவம் குறித்த வெளிப்படையான அதிருப்திகளைப் புரிந்துகொண்டவராகப் பேசியிருக்கிறார். குறிப்பாக, ராணுவம் மதச்சார்பற்றத் தன்மை யுடன் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
ராணுவத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட சிறுபான்மை சீக்கிய சமூகத்தில் இருந்து வந்திருப்பதால் பிக்ரம் சிங், ராணுவத்தின் மதச்சார்பற்ற தன்மையைப் பற்றி பேசுகிறார். சீக்கிய பொற்கோவிலில் ராணுவ நடவடிக்கை, பாபர் பள்ளிவாசல் இடித்தபோதான சம்பவங்களில் இந்திய ராணுவத்தின் மதச்சார்பு தன்மை வெவ்வேறு வடிவங்களில் வெளிப்பட்டது. பொற்கோவில் தாக்குதலில் காலணிகளை அணிந்தவாறு அதன் மதிப்பை மிதித்துக்கொண்டு ரத்த நடவடிக்கைகளில் இறங்கியது. சொற்ப நேரத்திற்குள் சீக்கிய சமூகத்திற்கும் இந்திய தேசத்திற்கும் இடையே அணைக்க முடியாத பகையையும் ராணுவம் பிளவையும் உண்டுபண்ணியது.
அயோத்தியில் பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டபோது, இதே ராணுவம், கோயில் கொடைக்கு வந்ததுபோல ஊர்சுற்றித் திரிந்தது. வீரர்கள் கையில் இருந்த ஆயுதங்களை பவ்யமாக வைத்துவிட்டு, சட்டவிரோத கட்டுமானத்தின் முன் கைகூப்பி நின்றனர். கரசேவகர்களை கலவரக்காரர்களாகப் பார்க்காமல் பக்தர்களாகப் பார்த்தனர். அப்போதுதான், இந்திய சிறுபான்மை சமூகங்களுக்கு இந்திய ராணுவத்தின் மீதான நம்பிக்கை தூர்ந்து போனது.
இனரீதியாகவும், பகுதி உணர்வுகளோடும் கூட ராணுவம் சார்பு நிலை எடுக்கிறது. விடுதலைப் புலிகளை கட்டுப்படுத்துவதாக சொல்லிச் சென்று இலங்கையில் ஈழ மக்களைக் கொன்று குவித்தது அமைதிப்படை. ஈழத்தமிழ் இளம்பெண்களை பலாத்காரம் செய்தது. ராணுவம் செய்த கொடுமைக்காகவே ராஜீவ் காந்தி பலிவாங்கப்பட்டார்.
வடகிழக்கு மாநிலங்களிலும், காஷ்மீரிலும் சிறப்புச் சட்டங்கள் இயற்றி வீதிக்கு வீதி நிற்கிறது ராணுவம். அங்கெல்லாம் ராணுவம் நிறுத்தப்பட்டிருப்பதைக் கொண்டு அங்குள்ள மக்கள் மிக பயங்கரமானவர்கள், தேசவிரோதிகள் என்றெல்லாம் நம்பவைக்கப்படுகின்றனர். மணிப்பூர், மிசோரம், நாகலாந்து மாநிலங்களில் இந்திய ராணுவம் செய்திருக்கும் இரக்கமற்ற படுகொலைகளும், பாலியல் வன்முறைகளும் இன்னும் விசாரணைக்குள் வராத கொடும் குற்றங்கள்.
நாகலாந்தின் திமாப்பூர் மாவட்டத்தில் ராணுவம் செய்த போலி என்கவுண்டரை விசாரிக்க திமாப்பூர் ராணுவ அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக பிக்ரம் சிங் கூறுகிறார். ஒப்புக்கு ஒரு சம்பவத்தை விசாரித்து விட்டால் மக்களை திருப்திப்படுத்திவிட முடியுமா?
ராணுவத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையே நடக்கும் மோதலைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறுவதில் இருந்து, ராணுவம் என்பது மக்களின் அதிருப்தியைப் பெற்ற அமைப்பு, அது மக்களின் விருப்பத்திற்கு எதிராகவே அவர்கள் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் அவர் புரிந்துகொள்ள வேண்டும்.
காஷ்மீரின் லடாக் பகுதியில் ராணுவ அதிகாரிகளுக்கும் - ராணுவத்துக்கும் இடையே நடந்த மோதல் விசாரிக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். ஆனால் அதிகாரிகளும் - வீரர்களும் ‘தேடுதல் வேட்டை’ என்ற பெயரில் இளைஞர்கள் பலரை ‘காணாப் பொணமாக்கி’ உள்ளனர். இளம்பெண்கள் மீது வன்புணர்ச்சியும், கொலைகளும் நடத்தியுள் ளனர். தேசமே அதிர்ந்த சோப்போர் சம்பவம் உதாரணம்.
காஷ்மீரில் இந்திய ராணுவம் வெளிப்படையான மத உணர்வுகளை செயல்படுத்தி வருகிறது. கல்லெறிந்த சிறுவர்களைக் கூட ராணுவம் வீடாகத் தேடி கைது செய்கிறது.
ராணுவத்தில் சிறுபான்மை முஸ்லிம்களின் பங்களிப்பும், எண்ணிக்கையும் மிகக்குறைவாக இருக்கிறது. ராணுவத்துக்குள்ளேயே அவர்கள் சக்தி வாய்ந்த சமூகமாக இல்லை. சுதந்திர இந்தியாவில் ராணுவத்தில் இதுவரை ஒரு முஸ்லிம் தலைமைத் தளபதியாக பதவி வகித்ததில்லை.
மதக்கலவரத் தடுப்பு மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற இருக்கிறது. மாநில அரசுகள் மதக்கலவரங்களைக் கட்டுப்படுத்தத் தவறினால், மாநில காவல்துறையின் செயல்பாடுகளில் நம்பிக்கையில்லாது போனால், அப்பகுதிகளுக்கு ராணுவம் அனுப்பிவைக்கப்படும் என்று அந்த மசோதா கூறுகிறது. இந்த இடத்தில்தான் மதச்சார்பற்றத் தன்மையுடன் ராணுவம் இருக்கவேண்டிய அவசியம் உணரப்படுகிறது.
உள்ளூர் காவல்துறை முதல் உளவுத்துறை வரை மதச்சார்பு ஊட்டப்பட்டவர்களாக அதிகாரிகளும், ஊழியர்களும் உள்ளனர். நாட்டில் ஒவ்வொரு முஸ்லிமும் சந்தேகத்திற்கும் கண்காணிப்புக்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிராக வடிவமைக்கப்பட்ட கல்வி முறையும் ஊடகத்துறையும் முஸ்லிம்களுக்கெதிரான வெறுப்புணர்வையும், இருப்புக்கு எதிரான எரிச்சலையும் ஊட்டியிரு க்கின்றன. முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களைக் கட்டுப்படுத்துவதிலும், மட்டுப்படுத்துவதிலும் அரசு தோல்வி கண்டிருப்பதற்கும், அரசு எந்திரங்களை வேலை வாங்குவதில் நம்பிக்கையற்றுப் போயிருப்பதற்கும் நன்கு திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த உணர்வுகளும், எரிச்சல்களுமே காரணம்.
முஸ்லிம்களுக்கு எதிரான மதவெறி ஊட்டப்படும் சமூக அமைப்பில் இருந்தே காவல்துறைக்கும், உளவு அமைப்புகளுக்கும் ஆள் எடுக்கப்பட்டிருப்பதைப் போன்று ராணுவத்திற்கும் ஆள்சேர்ப்பு நடக்கிறது. பின்னர் ராணுவம் எப்படி சிறுபான்மையினரின் நம்பிக்கைக்குரிய அமைப்பாக இருக்க முடியும். ராணுவம் ஏற்கெனவே அந்த நம்பிக்கையை இழந்திருக்கிறது. நாட்டில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் அதுவும் முஸ்லிம்களால் நடந்ததாக செய்திகள் பரப்பப்பட்டால் முஸ்லிம்களின் குடியிருப்புகளை சீருடைகள் சூழ்ந்து கொள்கின்றன. பதற்றம் பற்றவைக்கப்படுகிறது. பருந்துகளைக் கண்ட கோழிக் குஞ்சுகளைப் போல முஸ்லிம்கள் வீடுகளில் ஒதுங்குகின்றனர். சற்று நேரங்களில் கைது செய்யப்படப் போகும் தங்கள் பிள்ளைகளின் நிலை கண்டு பதறுகின்றனர். பின்பு அவர்கள் உயிருடன் திரும்புவார்களா? இல்லை, எங்கோ கொண்டு போகப்பட்டு ராணுவத்தின் என்கவுண்டர்களுக்கு இரையாவார்களா? என்பது யாருக்குத் தெரியும்.
துப்பாக்கி ரவைக்கு இரையானதும் செய்தித் துறைக்கு தீனியானதும் இந்நாட்டில் முஸ்லிம் இளைஞர்கள்தானே. பயங்கரவாதிகள் என்ற பட்டப் பெயருடன் அவர்களுடைய வரலாறு முடிகிறது. இவ்வாறான பின்னணியில் ராணுவத்தை நம்பிக்கைக்குரியதாக எப்படி உணர முடியும்? அன்னிய நாடொன்றில் புகுந்துவிட்டதான வெற்றிக்களிப்பைப் போன்றே சொந்த மக்களின் வீதிகளில் ராணுவமும் மிடுக்காக நடந்துகொள்கிறது. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகளில் ராணுவம் அண்டை நாடுகளுடன் மோதியதைவிட சொந்த நாட்டு மக்களோடு மோதிய சம்பவங்கள்தான் அதிகம். மியான்மர் ராணுவ ஆட்சி நடக்கும் நாடு. ஆனால் மியான்மரைக் காட்டிலும் இந்தியாவிலும் இலங்கையிலும்தான் மக்கள் மீதான ராணுவத்தின் அடக்கு முறைகள் அதிகம் நடந்திருக்கின்றன. கார்க்கில் மோதலில் விருதுகளுக்காக தன் நாட்டு வீரர்களையே கொன்று விட்டு கணக்கு காட்டிய துரோக கதையும் உண்டு தானே?
ஆனாலும் ராணுவம் மரியாதைக்குரிய பீடமாக கருதப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் மகேந்திர சிங்தோனி தான் ஓய்வு பெற்றதும் ராணுவத்தில் சேர்வதாக கூறுகிறார். ராணுவ பயன்பாடு இல்லாத சமூகமே நல்ல மனிதர்களை கொண்ட சமூகமாக இருக்கும்.
இன உணர்வுகளும், மத உணர்வுகளும் வெறியாக ஊட்டப்பட்ட சமூக அமைப்பில் இருந்து பொறுக்கி எடுக்கப்படும் வீரர்களை வெறும் 28 மாத பணிக்காலத்தில் தளபதி பிக்ரம் சிங் எப்படி மதச்சார்பற்ற அமைப்பாக மாற்றுவார் என்பதே கேள்வி.

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...