அஸ்ஸலாமு அலைக்கும்....(இறைவா!)மதுக்கூர் பேரூர் கழக புதிய நிர்வாகிகளுக்கு இனிய நல் வாழ்த்துக்கள்.தலைவராக ராசிக் அகமது அவர்கள் தேர்வு...

Thursday, April 29, 2010

இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கு! குஜராத் அரசுக்கு காலக்கெடு விதித்தது உயர்நீதிமன்றம்!

இந்தியாவின் பெருமையினை குலைக்கும் விதமாக குஜராத்தில் நடைபெற்ற இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று வரை நிவாரணம் கிடைக்க வில்லை. வீடிழந்து, வாழ்விழந்து வானமே கூரையாக வாழ்ந்துவரும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் களின் அவலக்குரல் செவிடன் காதில் ஊதிய சங்காக ஆயிற்று.

2002ல் மாபெரும் இனப்படு கொலை நிகழ்த்திய மோடி அரசு உலகெங்கும் கடும் கண்டனத்திற்கு இலக்கானது. மோடிக்கு வெளிநாடுகளில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட போதும் உள்நாட்டில் சில சக்திகள் மோடிக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வந்தன.

கருணை காட்டப்பட வேண்டிய அப்பாவி ஜீவன்களின் நிலை தொடர்ந்தபடியே இருந்தது.

குஜராத் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் நிவாரண உதவிகள் வழங்கப்படாத நிலையைத் தொடர்ந்து இரண்டு சமூகநல ஆர்வலர்கள் குஜராத் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப் பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனக்கூறி காலக்கெடு விதித்துள்ளது உயர்நீதிமன்றம்.

தலைமை நீதிபதி எஸ். முகபோத்யாயா, நீதிபதி அகீல் குறைஷி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் தனது தீர்ப்பில், எதிர்வரும் ஜூன் 17ஆம் தேதிக்குள் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டுத் தொகைகளை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

எட்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னமும் நீதியும் நிவாரணமும் கிடைக்காத அவலநிலையில் ஏராளமான மக்கள் தவித்து வருவது ஒரு தேசிய அவமானம் அல்லவா?

தீஸ்தா செதல்வாட், முகுல் சின்ஹா, ஜாகியா ஜாஃப்ரி என நீதிக்காகப் போராடும் பெருமக்கள் முனைப்புடன் சட்ட யுத்தத்தை நிகழ்த்திய போதும் நீதி வெல்ல இன்னும் நெடுங்காலம் காத்திருக்க வேண்டியுள்ளது.

மோடிக் கூட்டத்திற்கு தண்டனை எப்போது?

- TMMK.in

Sunday, April 25, 2010

குணங்குடி அனிபா வழக்கில் தாமதமாகும் தீர்ப்பை கண்டித்து தமுமுக கண்டன பேரணி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர்களில் ஒருவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் பொருளாளருமான குணங்குடி ஆர்.எம். அனிபா அவர்கள் மீது பல்வேறு பொய் வழக்குகள் புனையப்பட்டு அவர் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடி வருகிறார். அவர் மீது போடப்பட்ட பல வழக்குகளில் அவர் விடுதலைப் பெற்றிருந்தாலும் ஒரேயொரு வழக்கு மட்டும் இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கிலும் இவருக்கு எதிராக காவல்துறையினர் நிறுத்திய இரண்டு சாட்சிகளும் பிறழ் சாட்சியங்கள் அளித்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை முழுவதுமாக நிறைவடைந்து பல மாதங்களாகிய பிறகும் எவ்வித காரணமுமின்றி பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்காமல் காலதாமதம் செய்து வருகின்றது. பின்னர் ஒரு வழியாக தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும் தீர்ப்பு அளிக்கப்படாமல் மீண்டும் சாட்சிகள் விசாரணை என்ற கேலிக் கூத்து நடை பெற்றுள்ளது. தொடர்ந்து தீர்ப்பு தேதி அளிக்காமல் நீதிபதியை மாற்றும் வேலையும் நடந்து வருகிறது. இவ்வழக்கில் இதுவரை 7 நிதிபதிகள் மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற செயல்பாடுகள் இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டு யாரும் விடுதலையாகி விடக்கூடாது என்பதில் சிறப்புக் கவனம் செலுத்தப் படுகிறதோ என்ற கருத்து மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

குணங்குடி அனிபாவிற்கு பிணையும் மறுக்கப்பட்டு வருகின்றது. நீண்ட சிறைவாசத்தின் காரணமாகவும், முதுமையின் காரணமாகவும் குணங்குடி அனிபா அவர்கள் பல்வேறு நோய்களுக்கு இலக்காகி மிகவும் பலவீனமான நிலையில் உள்ளார்.

தாமதப்படுத்தப்படும் நீதி மறுக்கப்படும் நீதியாகவும் கொடூரமான மனிதஉரிமை மீறலாகவும் உள்ளது. இந்த அநீதியை கண்டித்தும், உடனடியாக குணங்குடி அனிபா தொடர்புடைய வழக்குகளில் தீர்ப்பு வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வரும் மே 5ம் தேதி சென்னை உயர்நீதி மன்றம் நோக்கி கண்டன பேரணி நடைபெறவுள்ளது.

Tuesday, April 13, 2010

ஒபாமாவின் 'மாற்றம்', மாறாது நிலைக்குமா?

"இஸ்லாமியத் தீவிரவாதம்", "ஜிஹாதி பயங்கரவாதம்" தொடங்கி, "இன்னொரு சிலுவைப் போர்" வரை, இஸ்லாத்தின் மீது காழ்ப்பைக் கக்கும் சொல்லாட்சிகளை உலகுக்கு அறிமுகப் படுத்திய அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் மூலமாக அமெரிக்காவுக்கு ஏற்பட்ட களங்கத்தை, "மாற்றம்" என்ற ஒற்றை முழக்கத்தோடு பதவிக்கு வந்திருக்கும் அதிபர் பராக ஒபாமா துடைக்க முயலுவதாகத் தெரிகிறது.

'அமெரிக்காவின் பாதுகாப்புத் தொலைநோக்கு' எனும் திட்ட வரைவுகளிலிருந்து "இஸ்லாமியத் தீவிரவாதம்" எனும் சொல்லை நீக்குவதற்கு அண்மையில் ஒபாமாஆணை பிறப்பித்திருக்கிறார்.

"அமெரிக்கா போரிடப் போவது பயங்கரவாதிகளுடனே அன்றி, இஸ்லாத்துடனோ முஸ்லிம்களுடனோ அல்ல. ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் தீவிரவாதிகள் எனும் கண்ணோட்டத்தோடு அமெரிக்கா பார்க்காது" என்று அதிபர் பதவி ஏற்றவுடன் ஒபாமா செய்த அறிவிப்பு, இப்போது அரசு ரீதியான செயல்பாட்டுக்கு வரத் தொடங்கி இருக்கிறது என எதிர்பார்கலாம்.

மேற்காணும் ஆணை செயலுக்கு வந்தால், அரசின் உயர்மட்ட அளவில் மட்டுமின்றி, அமெரிக்காவின் 'யூத லாபி'யிலும் பெருத்த 'மாற்றம்' ஏற்படுத்தும் என நம்புவதற்கு வாய்ப்பிருக்கிறது.

முந்தைய புஷ் நிர்வாகம், தனது பாதுகாப்புக் கொள்கையில், "21ஆம் நூற்றாண்டின் மாபெரும் போராட்டமாக இஸ்லாமிய அடிப்படைவாதத்துடனான கொள்கைப்போரையே அமெரிக்கா கருதுகிறது" என்று குறிப்பிட்டிருந்தது. முஸ்லிம் நாடுகளைக் குறித்து ஒருமுறை "ரவுடி நாடுகள் (Rogue States)" என்றும் "சாத்தானின் அச்சு (Axis of Evil)" என்றும் வர்ணித்த புஷ், இஸ்லாத்தை, "கொடூரமான தீய மதம் (Evil and Wicked Religion)" என்றும் குறிப்பிட்டவராவார்.

"இஸ்லாமிய பயங்கரவாதம், இஸ்லாமிய ஜிஹாத், இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்ற, தீவிரவாதத்துடன் மதத்தை இணைக்கும் சொல்லாட்சிகளைத் தவிர்த்துக் கொள்ளுமாறு முந்தைய அரசுக்கு நான் பலமுறை பரிந்துரைத்தேன்; ஆனால் பயனில்லாமல் போனது. ஏனெனில், மேற்காணும் சொற்களைச் செவியுறும் ஒரு முஸ்லிம், தம் மதத்தின் மீதான தாக்குதலாகவே அவற்றைக் கருதுவார். அப்படிக் கருத வேண்டும் என்றுதான் உஸாமா பின் லேடன் விரும்புவார்" என்று கூறுகிறார் காரன் ஹ்யூகஸ். இவர் முன்னாள் அதிபர் புஷ்ஷின் அரசில் முஸ்லிம் உலகினரோடு உறவு கொண்டாடுவதற்கான மேல்மட்ட அதிகாரியாக இருமுறை பதவி வகித்தவராவார்.

அணுஆயுதக் குறைப்பு, குவாண்டனாமோ சிறை மூடுவிழா போன்ற புஷ் நிர்வாகத்துக்கு எதிரான தனது கொள்கையைப் படிப்படியாகச் செயலுக்கு கொண்டு வரும் ஒபாமாவின் திட்டங்களில், "இஸ்லாமியத் தீவிரவாதம்" என்ற சொல்லைப் பயன்படுத்தத் தடைவிதித்தல் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.


உலகளாவிய முஸ்லிம்களுடனான நேசக்கரம் நீட்டலின் ஒரு பகுதியாகவே அமெரிக்க அதிபரின் ஆணை பார்க்கப் படுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். "அமெரிக்கா முஸ்லிம்களின் எதிரி இல்லை என்றும் தீவிரவாதிகளை ஒடுக்குவதில் மட்டுமே அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்கும்" என்றும் ஒபாமா வலியுறுத்தி வருவதன் ஓர் அங்கமே இது என்றும் கூறுகிறார்கள்.

கடந்த ஜூன் 4, 2009இல் கெய்ரோவில் உரையாற்றிய ஒபாமா, "புதிய தொடக்கம்" எனும் தலைப்பில் இதே கருத்தை வலியுறுத்தியது நினைவிருக்கலாம்.

"உலகின் இரண்டாவது பெரும்பான்மையினர் பின்பற்றும் இஸ்லாத்தைப் பழித்துக் கொண்டு முஸ்லிம்களுடன் நேசக்கரம் நீட்டுவதாகக் கூறுவது ஒன்றுக்கும் உதவாது" என்று ஒபாமாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் அங்கம் வகிக்கும் பிரதீப் ராமமூர்த்தி உருப்படியாக ஆலோசனையைக் கூறியிருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க யூத லாபியை மீறி, 'மாற்றம்' மாறாமல் செயலுக்கு வந்தால், அமெரிக்காவைப் பற்றிய உலக முஸ்லிம்களின் மனதில் உள்ள வெறுப்பு, படிப்படியாக நீங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது. அந்த வாய்ப்பை வழங்குவதில் ஒபாமா உறுதியுடன் இருப்பாரா?

எதிர்காலம் பதில் சொல்லும்!

-நன்றி சத்தியமார்க்கம்.காம்

Wednesday, April 7, 2010

மார்க்கம் பேணும் விளையாட்டு வீரர் யூஸுஃப் பதான்!

இன்றைக்கு காசுதான் பிரதானம். மற்றவை சர்வசாதரணம் என்ற எண்ணுடத்துடன் வாழும் முஸ்லிம்களுக்கு மத்தியில், என்ன திறமை இருந்தாலும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பது குதிரை கொம்பான விஷயமாக இருக்கும் இன்றைய காலத்தில், அதிலும் ஒரு முஸ்லிம் தனது திறமையால் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து, தன்னை நிலை நிறுத்திக் கொண்ட இளைஞன் யூஸுஃப் பதான், மதுபானம் தொடர்பான விளம்பர "லோகோ' அணிவதில்லை என்று துணிச்சலாக முடிவு எடுத்துள்ளார்.

இந்திய அணியின் அதிரடி மட்டை பந்து வீரர் யூஸுஃப் பதான். தற்போது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இத்தொடரில் அதிவேக சதம் அடித்த பெருமைமிக்க இவர், மதுபானம் தொடர்பான விளம்பரங்களை தனது சட்டையில் அணிவதில்லை என்று முடிவு செய்துள்ளார். இதற்கேற்ப டில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது, தனது சட்டையில் இருந்த "கிங்பிஷர்' நிறுவன "லோகோவை' துணியால் மறைத்து களமிறங்கினார். "கிங்பிஷர்' நிறுவனம் "பீர்' போன்ற மதுபானங்களை தயாரித்த போதும், கிரிக்கெட்டிலும் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு அணிகளுக்கு "ஸ்பான்சராக' உள்ளது. தவிர, ஐ.பி.எல்., பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் உரிமையாளராகவும் உள்ளது.

இந்நிலையில் அணியின் மற்ற வீரர்கள் "கிங்பிஷர்' லோகோவை அணியும் போது, யூசுப் மட்டும் மறுப்பதற்கு அவரது மதநம்பிக்கை தான் முக்கிய காரணம். இளம் பருவத்தில் பரோடாவில் உள்ள மசூதியில் வளர்ந்த இவர், இஸ்லாமிய நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்றி வருகிறார். இது குறித்து யூசுப் கூறுகையில்,""கிங்பிஷர் என்பது மதுபான வகையை சேர்ந்தது. இதனை உட்கொள்வதோ அல்லது அதற்காக விளம்பரம் செய்வதோ எனது மதநம்பிக்கைக்கு எதிரானது,''என்றார்.

இது பற்றி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,""யூசுப் சிறப்பாக ஆடி வருகிறார். "லோகோ' தொடர்பான இவரது முடிவு பெரிய விஷயம் இல்லை. இதற்கு நிர்வாகம் எதிர்ப்பு தெரிவிக்காது,''என்றார்.

கிரிக்கெட் அரங்கில், இதற்கு முன் தென் ஆப்ரிக்க வீரர் ஹஷிம் ஆம்லா "கேசில் லேகர்' என்ற மதுபானத்தின் "லோகோவை' சட்டையில் அணிய மறுத்தார். இதற்கு தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டும் அனுமதி அளித்தது. இவரது வழியில் யூசுப் பதானும் மதுவுக்கு எதிரான தனது கொள்கையில் உறுதியாக உள்ளார்.

Sunday, April 4, 2010

புர்காவை தடை செய்யும் எண்ணத்தை கைவிட வேண்டும் -ஃபிரான்ஸ் அரசுக்கு ஸ்டேட் கவுன்சில் அறிவுரை

பாரிஸ் பொது இடங்களில் முஸ்லீம்கள் புர்கா அணிவதை முழுவதுமாக தடைசெய்வது சட்ட விரோதம் என்றும், அப்படி செய்தால் அது ஒரு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கும் என்றும், ஆதலால் இந்த முடிவை அரசு கைவிட வேண்டும் என்றும் புர்கா தடையை விசாரித்து வரும் ஃப்ரன்ஸ் ஸ்டேட் கவுன்சில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


பிரான்சின் உச்ச நீதிமன்றம் போல் கருதப்படும் இந்த தீற்பாயம், மேலும் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, புர்கா முறையை பாதியளவு தடைச் செய்தாலும் அது பெறும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் புர்கா தடையை அமல்படுத்துவது ஃபிரெஞ்ச் மற்றும் ஐரோப்பிய வரைமுறைகளின் மனித உரிமை மீறலாகும் என்றும் விமர்சித்துள்ளது. முன்னதாக,பிரான்ஸ் பிரதமர் புர்கா முறையை தடைசெய்வது குறித்து ஸ்டேட் கவுன்சிலிடம் ஆலோசனை கேட்டிருந்ததை தொடர்ந்து இந்த அறிக்கை வெளிவந்தது.


பிரான்சின் பார்லிமென்ட் கமிட்டி புர்கா முறையை பாதியளவாவது தடை செய்ய வேண்டும் என்று முன்னதாக அரசை கேட்டு கொண்டது. ஒரு பக்கம்,பிரான்சின் ஜனாதிபதி சர்கோஸி முழு தடையை வலியுறுத்தியும், புர்கா முறையை தடைசெய்வதின் மூலம் பிரான்ஸ் அரசு பெண்களின் எதை வேண்டுமானாலும் அணியலாம் என்ற ஜனநாயக சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றும் மற்றொரு பக்கம் மக்கள் குரல் எழுந்த வண்ணம் இருந்த நிலையில், ஸ்டேட் கவுன்சிலின் இந்த அறிவுரை வரலாறு முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருப்தப்படுகிறது.

இவ்விவகாரத்தில், பிரான்ஸ் அரசு தன் நிலைபாட்டை மாற்றுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Saturday, April 3, 2010

ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு

ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு , 01-04-2010 முதல் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஹஜ் கமிட்டி செயல் அலுவலர் அலாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்த ஆண்டிற்கான ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழக முஸ்லிம்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பயணத்திற்கான தற்காலிக பதிவு விண்ணப்பங்களை, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழக ஹஜ் குழு நிர்வாக அலுவலரிடம் சென்று, ஏப்ரல் 1ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.hajcomittee.comஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தை நகல் எடுத்துக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன், பயணி ஒருவருக்கு 200 ரூபாய் பரிசீலனை கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழு நடப்பு கணக்கில்(எண்:30683623887) செலுத்தி, அதற்கான வங்கி ரசீது நகலுடன் தமிழக ஹஜ் குழுவிடம், ஏப்ரல் மாதம் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சர்வதேச பாஸ்போர்ட் இருப்பின், அதன் நகலை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பித்திருந்தால், இருப்பிட முகவரி சான்றிதழை இணைக்க வேண்டும். பரிசீலனை கட்டணமாக அளிக்கும் பணம் திருப்பி அளிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, April 1, 2010

அயோத்திக்கு போனேன்! மனம் கலங்கினேன்! பாபர் மஸ்ஜித் நிலத்தில் தமுமுக தலைவர்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற் றக் கழகத்தின் தலைவர் பேரா சிரியர் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கடந்த வாரம் உத்தரபிரதேசம் மற்றும் டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். உத்தரபிர தேசத்தின் தலைநகர் லக்னோவில் கடந்த மார்ச் 19, 20 மற்றும் 21 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் 21வது பொதுக் குழுவில் அவர் கலந்து கொண்டார். பிறகு மார்ச் 22 அன்று அயோத்திக்கும் மார்ச் 23 அன்று அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்கும் மார்ச் 24 மற்றும் 25 அன்று டெல்லிக்கும் சென்று விட்டு தமிழகம் திரும்பினார். தமுமுக தலைவர் தனது வட இந்திய பயணம் குறித்து மக்கள் உரிமைக்கு அளித்த சிறப்பு பேட்டி:

பாபரி மஸ்ஜித் பற்றிய கேள்வி: தங்களின் அயோத்தி பயணம் குறித்து சொல்லுங்களேன்...!

பேராசிரியர்: பாபரி மஸ்ஜித் இடிக்கப்படுவதற்கு முன்பு 1980&களில் சென்றிருக்கிறேன். இப்போது மீண்டும் இடிப்பிற்கு பிறகு சென்றேன். பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் உள்ளது உள்ளபடியே உள்ளதா என்பதை கண்காணிப்பதற்காக நீதிமன்றம் நியமித்துள்ளவர்களில் ஒருவரான பைசாபாத்தைச் சேர்ந்த காலிக் அஹ்மது என்னை ‘சர்ச்சைக்குரிய” பகுதிக்கு அழைத்துச் சென்றார். அவர் நான் வருவது குறித்து முன்கூட்டியே காவல்துறைக்கு தகவல் கொடுத்திருந்தார். செல் போன், கேமரா, பேனா, காகிதம் என்று எதுவும் எடுத்துச் செல்லாமல் சென்றோம்.

பல இடங்களில் பலத்த சோதனைக்குப் பிறகு இரும்பு வேலிகளுக்கு நடுவே நடந்து 450 ஆண்டு காலம் முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலமாக இருந்த பாபரி மஸ்ஜித் அமைந்த இடத்தை நெஞ்சில் பெரும் துயரத்தை சுமந்தவனாக பார்த்தேன். நீதிமன்றத் தீர்ப்பு விரைவில் வர உள்ளது என்றும் பாபரி மஸ்ஜித் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கை நடத்தும் வழக்குரைஞர் ஜபர்யாப் ஜெய்லானி லக்னோவில் என்னிடம் சொல்லியிருந்தார்.

தீர்ப்பு சாதகமாக அமைந்து அடுத்த முறை பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் ஏக இறைவனை தொழும் வாய்ப்பு எனக்கும், முஸ்லிம் சமூகத்திற்கும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்த வண்ணமாக அந்த இடத்தை பார்த்தேன். நானும் என்னுடன் லக்னோவில் இருந்து வந்த எனது நண்பர் மட்டுமே அங்கு தாடியுடன் இருந்தோம். பாபரி மஸ்ஜித் அமைந்த இடத்தில் அமைந்திருந்த தற்காலிக கோயில் அருகே நடுநிலையுடன் இருக்க வேண்டிய காவல்துறையினர் ராம் லாலாவை தரிசனம் செய்யுங்கள் என்று அனைவரையும் பார்த்து (எங்களையும் சேர்த்து தான்) கூறிக் கொண்டிருந்தனர். மொத்த இடத்தையும் பார்ப்பதற்கு அரை மணிநேரம் எடுத்தது. தற்போது போடப்பட்டுள்ள பலத்த பாதுகாப்பு டிசம்பர் 6, 1992&க்கு முன்பு போடப்பட்டிருந்தால் பள்ளிவாசலை காப்பாற்றியிருக்கலாம். குதிரைகள் லாயத்தை விட்டு தப்பிய பிறகு லாயத்தை பூட்டி என்ன பலன் என்ற சிந்தனை திரும்ப திரும்ப வந்துக் கொண்டிருந்தது. அயோத்தி பண்டையக் காலங்களில் புத்தர்களின் வழிப்பாட்டு தலமாக, இந்துக்களின் வழிப்பாட்டுத் தலமாக இருந்தது போல் அது முஸ்லிம்களின் நகரமாக இருந்தது என்பதற்கான தடயங்கள் அங்கு ஏராளமாக உள்ளதை நேரில் பார்க்க முடிந்தது. அயோத்தியை சுற்றிய 12 கி.மீ. சுற்றுப்பரப்பில் பல பள்ளிவாசல்கள் உள்ளன. இது தவிர இரட்டை நகரமான பைசாபாத் மற்றும் அயோத்தியை இணைக்கும் சாலையின் இரு புறத்திலும் ஏராளமான பள்ளிவாசல்களும் முஸ்லிம் அடக்கத்தலங்ளையும் பார்க்க முடிந்தது.

அயோத்தியின் மக்கள் தொகையான ஒன்னரை லட்சத்தில் 6 விழுக்காட்டினர் முஸ்லிம்கள் ஆவர். இங்கு 35 பள்ளிவாசல்கள் உள்ளன. இவற்றில் ஐவேளை தொழுகையும் நடைபெற்று வருகின்றது. பாபரி மஸ்ஜிதை சுற்றி அரசு கையகப்படுத்திய 67 ஏக்கர் நிலத்தை சுற்றியும் பள்ளிவாசல்களை பார்க்க முடிந்தது. அனுமன்கிரி கோயிலிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் 40 ஏக்கர் பரப்பளவு உள்ள முஸ்லிம் அடக்கத்தலம் உள்ளது. இங்கு 12 அடி நீளமுள்ள ஒரு அடக்கவிடம் (கப்ரு) உள்ளது. இது முதல் மனிதர் நபி ஆதமிற்கு பிறகு வந்த நபி ஷீத் அவர்களுடையது என்று உள்ளூர் முஸ்லிம்கள் நம்பி வருகின்றனர். (இங்கு படம் எடுத்துக் கொண்டோம்)

இன்னும் பல அடக்கவிடங்கள் உள்ளன. பாரசீக மொழியிலான கல்வெட்டுகளும் அதில் உள்ளன. இவையெல்லாம் அயோத்தி முஸ்லிம்களின் நகரமாகவும் தொன்மை தொட்டு விளங்கி யுள்ளது என்பதற்கு சான்றாக அமைந்துள்ளன.

இறுதியாக பாபரி மஸ்ஜித் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கின் முதல் மனுதாரர் ஹாசிம் அன்சாரியை அவரது இல்லத்தில் சந்தித்தேன். இவருக்கு வயது 92. பாபரி மஸ்ஜித் பள்ளிவாசலில் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இவர் தான் அந்த பள்ளிவாசலின் முத்தவல்லி. (பள்ளிவாசல் நிர்வாக குழு தலைவர்). 1949ம் ஆண்டு டிசம்பர் 22 வரை பாபர் பள்ளிவாசலில் இரவு தொழுகை வரை நடை பெற்றது. பிறகு நள்ளிரவில் தான் பள்ளிவாசலுக்குள் ஸ்ரீராமர், லட்சுமணர், சீதை, ஹனுமான் சிலைகள் வைக்கப்பட்டன. அன்று முதல் இவர் வழக்காடிவருகிறார். காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடுகிறார்.

காங்கிரஸ் ஆதரவு முஸ்லிம் தலைவர்களையும் இவர் வன்மையாக கண்டித்தார். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது பூட்டா சிங் பாபரி மஸ்ஜிதை விட்டுக் கொடுக்குமாறும் அதற்காக 3 கோடி ரூபாயும், பெட்ரோல் பங்கும், இவரது மகனுக்கு அரசு வேலையும் தருவதாக ஆசைவார்த்தை காட்டியதாகவும், ‘எடு பழைய செருப்பை' என்று கூறி அவரை விரட்டியதையும் ஆவேசத்துடன் என்னிடம் பகிர்ந்து கொண்டார். தென் இந்திய முஸ்லிம்கள் குறிப்பாக தமிழக முஸ்லிம்கள் பாபரி பள்ளிவாசலுக்காக காட்டும் ஆர்வம் தன்னை நெகிழ வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

என்னை அயோத்திக்கு அழைத்துச் சென்ற நண்பர் காலிக்கிடம் என்னைப் போல் சாதாரண முஸ்லிம்கள் பாபரி வளாகத்திற்குள் சென்று பார்க்கலாமா என்று கேட்டேன். அது இயலாத காரியம் என்று அவர் பதிலளித்தார். முஸ்லிம்கள் வந்தால் அவர்கள் கடுமையாக சோதிக்கப்பட்டு, தடுத்து நிறுத்தப்பட்டு பிறகு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அவர் மேலும் கூறினார். மேலும் தென் இந்திய முஸ்லிம் தலைவர்களில் நீங்கள் தான் முதன் முதலாக இங்கே உள்ளே சென்று பார்த்து உள்ளீர்கள் என்று அவர் கூறினார்.

பாபரி மஸ்ஜித் பற்றியும் அயோத்திப் பற்றியும் ஆய்வு செய் வதற்காக ஒரு ஆய்வு நிறுவனத்தை நடத்தி வருகிறார் நண்பர் காலிக். பாபரி மஸ்ஜிதை மீட்பதற்காக இந்தியா முழுவதும் உள்ள முஸ்லிம்கள் போராடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் அயோத்தியில் வக்ப் செய்யப்பட்ட இடங்களை, கப்ருஸ் தான்களை சில சுயநலமிகள் விலைக்கு விற்கும் அவலமும் நடைபெற்று வருகின்றது என்று அவர் தெரிவித்தார். என்னுடன் லக்னோவில் இருந்து கார் ஒட்டி வந்த இளைஞர் சில மாதங்களுக்கு முன்பு தான் பார்த்தபோது கப்ருஸ் தானாக இருந்த இடம், தற்போது கட்டிடமாக கட்டப்பட்டு வருவதை சுட்டிக்காட்டினார்.

இறுதியாக அயோத்தி ரயில் நிலையத்தில் அலிகர் செல்வதற்காக கைபியத் எக்ஸ்பிரஸ் பிடிப்பதற்காக நின்ற போது லக்னோவில் இருந்து என்னுடன் வந்திருந்த எனது நண்பர் டாக்டர் அனீஸ் சொன்ன சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். டிசம்பர் 6, 1992ல் பாபரி மஸ்ஜித் வளாகத்தில் உள்ளது உள்ளபடியே இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் கரசேவை என்ற பெயரில் பாபர் பள்ளிவாசலை இடிப்பதற்கு கரசேவகர்கள் ரெயில் மூலம் தான் அயோத்திக்கு வந்தார்கள். அப்போது நரசிம்மராவ் அமைச் சரவையில் ரெயில்வே அமைச்சராக இருந்தவர் சி.கே. ஜாபர் ஷரீப். இவர் அயோத்திக்கு செல்லும் ரெயில்களை உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நிறுத்தி யிருந்தால் ஆயிரக்கணக்கில் கரசே வகர்கள் அயோத்திக்கு வந்திருக்க முடியாது.

இதேபோல் அவர் சொன்ன இன்னொரு செய்தி என்னை உறைய வைத்தது. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட அன்று பிரதமரை சந்தித்த குழுவில் நானும் இடம் பெற்றேன். அதற்கு முன்பு சுலைமான் சேட் சாஹிப் அவர்கள் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்து விடுவோம் என்று ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தார். ஆனால் அவரது ஆலோசனையை சையத் சகாபுதீன், ஜாபர் ஷரீப் உள்ளிட்ட முஸ்லிம் எம்.பி.க்கள் கேட்க மறுத்துவிட்டார்கள். இதைக் கேட்ட நான், சமூக நலனை விட பதவி பெரிது என்று இந்த இருவரும் எண்ணியதால் அதன் பிறகு அவர்கள் எம்.பி.களாக ஆகவே முடியவில்லை என்று நான் சொல்லிக் கொண்டிருந்த போது கைபியத் எக்ஸ்பிரஸ் நிலையத்திற்குள் வந்து விட்டது.

மேலும் கேள்விகளுக்கு : www.tmmk.in

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...