இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Monday, November 4, 2013

மதுக்கூரில் விரும்பதகாத சம்பவம்




மதுக்கூர் இடையகாடு (பெரியார் நகர்) பகுதியில் வசித்துவரும் சகோதரர் சாகுல்ஹமீது அவர்கள் மதுக்கூர் சந்தைப்பள்ளிக்கூடம் எதிரில் PTM என்ற ஹோட்டல் நடத்தி வருகின்றார்.(உணவகம்)இவரின் இளைய மகன் தாரிக் வயது 23.இவர் டிப்ளமோ படித்து உள்ளார்.சகோதரர் தாரிக் தனது தந்தையின் ஹோட்டலில் அத்தாவுக்கு உறுதுணையாக அனைத்து வேலைகளையும் ஆர்வமுடன் செய்வார்.

இந்தியன் தவ்ஹீத் ஜமாத்தின் மாநில நிர்வாகி மைதீன் என்பவருக்கும் ,தாரிக்கிற்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகின்றது.இந்நிலையில் தீபாவளி அன்று ஹோட்டல் விடுமுறை என்பதால் தாரிக் தனது நண்பர்களுடன் இடையகாடு வேலாடிப்பள்ளம் என்னும் குளக்கரையில் பேசிக்கொண்டு இருந்திருக்கின்றார்.அங்கே தனது நண்பர்கள் நியாஸ் அகமது,தாவூதுஷா ஆகியோருடன் வந்த மைதீனுக்கும்,தாரிக்குக்கும் கைகலப்பு ஏற்பட்டு உள்ளது.மைதீன் வைத்திருந்த கத்தியால் தாரிக்கை குத்தியதாக தெரிகின்றது.நிலைகுலைந்த தாரிக் கீழே விழ அருகில் நின்றுகொண்டிருந்த தாரிக்கின் நண்பர்கள் இருசக்கரவாகனத்தில் தாரிக்கை ஏற்றிவைத்துக்கொண்டு காவல்நிலையம் சென்றுள்ளார்கள்.(தீபாவளி என்பதால் எந்த மருத்துவரும் மதுக்கூரில் இல்லை) காவல் நிலையம் மூலமாக தமுமுக ஆம்புலன்ஸுக்கு தகவல் வர உடனடியாக காவல்நிலையம் சென்ற தமுமுகஆம்புலன்ஸ் படுகாயமடைந்து இருந்த தாரிக்கை அழைத்துக்கொண்டு பட்டுக்கோட்டை நோக்கி விரைந்தது.(இதற்கிடையில் மைதீனின் நண்பர் நியாஸ் என்பவர் தான் தான் தாரிக்கை குத்தினேன் எனக்கூறி மைதீனுடன்சென்று மதுக்கூர் காவல்நிலையத்தில்   சரண்டர் ஆகியிருக்கின்றான். படுகாயத்துடன் இருந்த தாரிக்கை ஆம்புலன்ஸில் மைதீனும் ஏற்றிவிட்டு இருக்கின்றார்)

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இங்கு பார்க்கமுடியாது தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லுங்கள் என கூற தஞ்சாவூர் நோக்கி விரைந்து இருக்கின்றார்கள்.ஆனால் தஞ்சாவூர் செல்லும் வழியில் பாப்பநாடு அருகில் தாரீக்கின் பல்ஸ் குறைந்துவிட்டது.தாரீக் மிகவும் ஆபத்தான நிலைக்கு சென்றுவிட்டார்.தஞ்சாவூர்  செல்லும் வழியில் தாரீக் இறந்துவிட்டார்.(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்)

தாரீக் வஃபாத்தான செய்தி மதுக்கூரில் பரவத்தொடங்கியது.யாரிடமும் எந்த பிரச்சனைக்கும் செல்லாத தாரீக் மரணமடைந்த செய்தி கேட்டு அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர்.மதுக்கூர் வரலாற்றில் நடைபெறாத ஓர் சம்பவம் நடந்துவிட்டதே என பலரும் மனவேதனையடைந்தனர்.

பட்டுக்கோட்டை அரசுமருத்துவமனைக்கு இரவு 10:30 மணிக்கு தாரீக்கின் உடல் பிரேதபரிசோதனைக்காக வைக்கப்பட்டது.சகோதரர் தாரீக்கின் வீட்டில் பெருமளவு கூட்டம் கூடத்தொடங்கியது.இரவு தாரீக்கின் தந்தை சாகுல்ஹமீது அவர்கள் மதுக்கூர் காவல்நிலையத்தில் புகார் செய்கின்றார்.மாலை தாரீக்கிற்கும்,மைதீனுக்கும் இடையே ஏற்பட்ட சம்பவங்களை  நேரில் பார்த்த  தாரீக்கின் நண்பர்கள் மைதீன் தான் கத்தியால் தாரீக்கை குத்தினார் என்ற சாட்சியினை கூறினார்கள்.மைதீனும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

03/11/2013 காலை 11:00 மணிக்கு பட்டுக்கோட்டை அரசுமருத்துவமனையில் தொடங்கிய பிரதேபரிசோதனை சுமார் 12:30 மணிக்கு முடிவு பெற்றது.தாரீக்கின் ஜனாஸா சம்மந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு மதுக்கூர் கொண்டுவரப்பட்டது.சற்றுநேரம் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்ட தாரீகின் ஜனாஸா மதியம் சுமார் 1:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.ஜனாஸா தொழுகையில் அதிகமனோர் பங்கு பெற்றனர்.தாரீக்கின் மறுமை வாழ்வுக்காக துவா செய்தனர்.தாரீக்கின் நல்லடக்கத்திற்கு பின்னர் கனத்த இதயத்துடனும்,கலங்கிய கண்ணீர்களுடன் கலைந்து சென்றனர்.மாலை மதுக்கூர் பெரியப்பள்ளிவாசலில் ஜமாத் தலைவர் மற்றும் நிர்வாகிகள்,இருசங்க நிர்வாகிகள்,மற்றும் இளைஞர் பெருமக்கள் பெரும் திரளாக கலந்துகொண்டு நடைபெற்ற சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.பலரின் கருத்துக்களை,ஆலோசனைகளை பெற்றுக்கொண்ட ஜமாத்தினர் நல்ல முடிவு எடுக்கின்றோம் என கூறி கலைந்து சென்றனர்.

நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்; நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.(திருக்குரான் 4:29)

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெரும் பாவங்கள் பற்றிக் கூறினார்கள்" அல்லது "பெரும் பாவங்கள் குறித்து அவர்களிடம் வினவப்பட்டது". அப்போது அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, கொலை செய்வது, பெற்றோரைப் புண்படுத்துவது ஆகியன (பெரும்பாவங்களாகும்)" என்று கூறினார்கள்.


அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று (ஆற்றிய உரையில் பின்வருமாறு) கூறினார்கள்: எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அ(ந்த ஓரிறை)வன் மீதாணையாக! "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்" என உறுதிமொழி கூறிய எந்த முஸ்லிமான மனிதரையும் கொலை செய்ய அனுமதி இல்லை.


இதுபோன்ற அல் குர் ஆனின் வசனங்களையும்,அல்லாஹ்வின் திருத்தூதரின் பொன்மொழிகளையும் பின்பற்றி அடுத்தவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டிய தவ்ஹீத் சிந்தனைவாதிகள் அதிலும் மாநில அளவில் தவ்ஹீத் அமைப்புகளில்,இயக்கங்களில் பொறுப்பில் உள்ளவர்களின் இச்செயல் மிகவும் வேதனைக்குரியது.

சகோதரர் தாரீக் படுகொலை

எங்கள் இறைவனே ! எங்களின் சகோதரன் தாரிக் மீது தாங்க இயலாத பாரத்தை சுமத்தி விடாதே ! தாரீக்கை பொறுத்தருள்வாயாக !கப்ரு வேதனையிலிருந்து காப்பாற்றுவாயாக !தாரீக்கிற்கு மன்னிப்பு வழங்குவாயாக ! தாரீக்கின் மீது கருணை பொழிவாயாக ! நரகவேதனையிலிருந்து எங்கள் சகோதரனை காப்பாற்றுவாயாக!நல்லவர்கள் கூட்டத்தில் எங்கள் தாரீக்கை சேர்ப்பாயாக ! அர்சின் நிழலுக்குரிய இளைஞர்களின் ஒருவராக எங்கள் சகோதரன் தாரீக்கை இருக்க செய்வாயாக!
யா அல்லாஹ் யாவற்றுக்கும் நீயே பாதுகாவலனாவாய் !

யா அல்லாஹ் இனி ஒருபோதும் இதுபோன்ற ஓர் சம்பவம் எங்களுரில் நிகழ்ந்துவிடாமல் எங்கள் ஊரை பாதுகாப்பயாக!எங்கள் யாவரையும் இறைச்சமுடையோருக்கு முன்னோடிகளாய்த்திகழ செய்வாயாக !

தமுமுக 

மதுக்கூர் நகரம்.

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...