அதிரைப்பட்டினம் - இது, கத்தும் கடல் சூழ் நாகையிலிருந்து தெற்கே சுமார் 120 கி.மீ தொலைவில் சேது பெருவழிச் சாலையில் அமைந்திருக்கும் கடற்கரை ஊர். சுருக்கி அழைக்கப்படுவதோ அதிரை. தமிழகத்தில் இஸ்லாம் நுழைந்த காலத்திலிருந்தே இங்கு முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் பயணிகள் அனைவரும் தங்கிச்செல்லும் பெருவழித் துறையாகவும் பழம்பெரும் துறைமுகப்பட்டினமாகவும் இலங்கியதாக அதிரை அறிஞர் தமிழ்மாமணி புலவர் அஹ்மது பஷீர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இங்கு காதிர் முஹைதீன் கல்லூரியும், அரபி மதரஸாக்களும், வணிகப் பெருமக்களும் வாழுகின்ற ஊர் என்பது பெரும்பாலான இஸ்லாமிய மக்களுக்குத் தெரியுமே தவிர சிறந்த இசுலாமியப் புலவர் பெருமக்களை தமிழுக்கு அளித்த ஊர் என்று ஒரு சிலரைத்தவிர மற்றவர்களுக்குத் தெரியாது. அத்தகையோரில் அண்ணாவியார் ( ANNAVIYAR ) என்று அழைக்கப்படும் புலவரும் ஒருவர்.
கடந்த இருபதாம் நூற்றாண்டு முழுவதும் வாழ்ந்தவர்கள் ஹாஜி கே. எஸ். செய்யது முஹம்மது அண்ணாவியார் அவர்கள். இவர்கள் கடந்த பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அமிர்த மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியார் அவர்களின் பரம்பரையில் வந்தவர்கள். நவரத்தினகவி காதிர் முகைதீன் அண்ணாவியார் அவர்களின் பேரரும் ஹபீப் முஹம்மது அண்ணாவியார் அவர்களின் மூத்தமகனும் ஆவார். 1902’ல் பிறந்து 1992 வரை தொன்னூறு ஆண்டுகாலம் வாழ்ந்தவர்கள். இவர்கள் தமிழ் இலக்கியத்திற்காக ஆற்றிய தொண்டுகள் எண்ணிலடங்கா. தம் முன்னோர்கள் எழுதி ஓலைச்சுவடிகளாக இருந்த பாடல்களை புத்தகவடிவில் ஆக்கியவர்கள். தம்முன்னோர்களைப் போலவே சிறந்த தமிழறிஞர், எல்லோரிடமும் இனிமையாகப் பழகும் பண்பாளர்.
தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற சீறிய எண்ணம் கொண்ட இம்மூதறிஞர் தம் முப்பாட்டனார் அமிர்த மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியார் மற்றும் அவர்கள் வழிதோன்றல் புலவர்கள் அனைவர்களது பாடல்களையும் ஓலைச்சுவடியிலிருந்து நூல் வடிவமாக மாற்றி நம் கையில் தவழவிட்டவர். "சந்தாதி அசுவகம்" - இது 4300 பாடல்களைக் கொண்ட தொகுப்பு இதை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் மனமுவந்து பெற்று வெளியிட்டுள்ளது மட்டுமல்லாமல் பாட நூலாகவும் ஆக்கியுள்ளது. இவர்களது சேவையைப் பாராட்டி சென்னை சீதக்காதி அறக்கட்டளை பொற்கிழி அளித்து பெருமைப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கி.பி. 1700 ம் ஆண்டு தொடக்கத்தில் தென்னகக் கடலோர நகரமாம் கீழக்கரையில் ( ஒரு சிலர் தமிழ்ச்சங்கம் கண்ட மதுரை என்றும் கூறுகின்றனர் ) பிறந்த பாலகர் இளம் வயதில் தாய், தந்தையரை இழந்து செய்வதறியாமல் விழித்துக்கொண்டிருந்த நிலை; ஆதரவளிப்பார் யாருமில்லை; உற்றமும் சுற்றமும் கண்டுக்கொள்ளாத நிலை; துயரங்கள் தொடர்ந்தன; எதிலும் பிடிப்பு ஏற்படாத பற்றற்ற நிலை; ஆனால் மனம் மட்டும் எதையோ தேடிக்கொண்டிருந்தது. அது என்ன என்று புரியவில்லை, எங்கு கிடைக்கும் என்றும் தெரியவில்லை
ஆதரவற்ற வாழ்வுக்கும் அறிவின் தேட்டத்துக்கும் இடையே ஏற்பட்ட போராட்டம். சுற்றத்தை மறந்தார் , பிறந்த ஊரைத் துறந்தார், பல ஊர்களை சுற்றியலையலானார், தேடியது எதுவோ அது கிடைக்கவில்லை. கிடைக்கும்வரை தேடலானார். சுற்றித்திரிந்த அவர் , பட்டுக்கோட்டையை அடுத்த மதுக்கூரை அடைந்தார். இங்கு நீ தேடியது கிடைக்கும் என்று உள்ளுணர்வு உணர்த்தியதோ என்னவோ அங்கு புனிதமிகு குர்ஆனையும் இசுலாமிய சட்டங்களையும் ஐயம்திரிபரக் கற்றார். மார்க்கக் கல்வி கற்பது என்பது ஒவ்வொரு இசுலாமியனுக்கும் அடிப்படை கடமை என்பதனை நன்கு உணர்ந்தார்.
அக்காலை மதுக்கூருக்கு அருகேயுள்ள மூத்தாக்குறிச்சி என்ற சிற்றூரில் வாழ்ந்த வாணியச்செட்டியார் என்ற தமிழ் மூதறிஞர் இருந்தார். அவரிடம் தம் தாய்மொழியான செந்தமிழை இலக்கண இலக்கியத்துடன் மட்டுமல்லாது யாப்பும் கற்று தேறினார்.
“அபாத்து”, “அத்ரமீ” என்ற பெயரால் அதிரைப்பட்டினத்தை அரபியர்கள் அழைத்தனர். அக்காலை ஈங்கு வசித்த மக்கள் அறிவு தாகம் பெற்றவர்களாக இருந்தனர். ஆனால் போதனை செய்வதற்கு உகந்த ஆசான் இல்லாததால் நல்லாசிரியனைத் தேடினர். அதுகாலை அய்யம்பேட்டையில் கல்விப் பேரமுதம் அளிக்கும் அண்ணாவியாரைப் பற்றிய செய்தி அறிந்தனர்.
அக்காலை வாழ்ந்த பெரும் வணிகரும், செல்வரும் வள்ளலுமாகிய இலப்பைத் தம்பி மரைக்காயர் அவர்களின் பெருமுயற்சியால் அண்ணாவியாரை அதிரைப்பட்டினத்திற்கு அழைத்துவந்து எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தனர். மக்களின் அறிவு தாகத்தைக் கண்டு முதல் பள்ளிகூடம் நிறுவியதாக ஒரு செய்தி உண்டு. அங்கேயே அவர்கள் நிரந்தரமாகத் தங்கியதால் இல்வாழ்க்கையை அங்கேயே தொடங்கியிருக்கவேண்டும் என்று நம்புவதற்கு வாய்ப்புள்ளது.
“அண்ணாவியார்” என்ற ஈழத்தமிழுக்கு ஆசிரியர், குரு, தற்காப்புக் கலை பயிற்றுகொடுக்கும் ஆசான் என்ற பொருள்கள் உள்ளன ( கிரியாவின் தமிழ் அகராதி ) உபாத்தியாயர், தலைவன், புலவன். தமையன் என்று சென்னைப் பல்கலைக் கழக லெக்சிகன் அகராதி கூறுகிறது. அங்கு வாழ்ந்த மக்கள் இலங்கையுடன் வணிகத்தொடர்பு வைத்திருந்ததால் அப்பெயரால் அவர்களை அம்மக்கள் அழைத்து பெருமைப் படுத்தியிருக்கலாம். நாளடைவில் அதுவே அவர்களுக்கு பெயராக வந்திருக்கலாம்.
தம்மை அழைத்துவந்து எல்லா வசதிகளையும் செய்துதந்த அதிரை மக்களுக்கு அறிவுச் செல்வத்தை குறைவில்லாமல் வாரி வாரி வழங்கினார்கள்.
நன்றி : ஹமீத் ஜாஃபர்
தகவல் : N.K.M. அப்துல் வாஹித் அண்ணாவியார் ( New York )
புகைப்படம் உதவி : N.K.M. அப்துல் வாஹித் அண்ணாவியார் ( New York )
நன்றி : http://adiraixpress.blogspot.in
No comments:
Post a Comment