இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Tuesday, October 30, 2012


சென்னையை முற்றுகையிட்ட அணுஉலை எதிர்ப்பாளர்கள்: கதிகலங்கிய மத்திய மாநில அரசுகள்


தமிழக அரசே! தமிழக அரசே!
மக்களின் உயிரோடு விளையாடாதே!
திரும்பப் பெறு! திரும்பப் பெறு!
காவல்படையைத் திரும்பப் பெறு!
போடாதே! போடாதே!
பொய் வழக்குப் போடாதே!
தளர்த்து! தளர்த்து!
144 தடை உத்தரவை தளர்த்து!
இழுத்து மூடு! இழுத்து மூடு!
அணுஉலையை இழுத்து மூடு!
& விண்ணதிரும் கோஷம், உணர்ச்சிப் பெருக்குடன் குழுமிய கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்களின் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தால் சென்னை கடந்த 29.10.2012 அன்று ஸ்தம்பித்தது.
கூடங்குளம் அணுஉலையை மூடக்கோரியும், கடந்த செப்டம்பர் 10ம் தேதி தமிழக காவல்துறை நடத்திய அரச பயங்கரவாதத்தைக் கண்டித்தும், அணுஉலை எதிர்ப்பாளர்களின் மீது போடப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப்பெறக் கோரியும், 144 தடை உத்தரவை நீக்கக்கோரியும் - ஆபத்தான ஆறு அரசியல் கட்சிகளைத் தவிர்த்து, ஆதரவான 40 இயக்கங்கள் அக்டோபர் 29ல் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை அறிவித்து இருந்தன.
போராட்ட அறிவிப்பு வெளியான உடன் தமிழக அரசியல் கட்சிகள் குறிப்பாக ஆளும் கட்சியான அதிமுக சற்றே மிரண்டு போனது. போராட்டத் தேதியான 29ல் நடைபெறவிருந்த வெள்ளிவிழா கொண்டாட்டங்களைத் தள்ளி வைத்து அறிவிப்பு வெளியிட்டது. மேலும் அறிவிக்கப்படாத கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியது. கூட்டமைப்பின் தோழர்களைத் தொடர்புகொண்ட உளவுத்துறையினர் போராட்டக்காரர்களின் வியூகங்களை அறிந்து கொள்ள பெரிதும் மெனக்கெட்டனர்.
சட்டமன்ற முற்றுகைப் போராட்ட அறிவிப்பு வெளியான உடன் வழக்கம்போல மமகவினர் களத்தில் மக்களை ஒருங்கிணைக்கத் தொடங்கினர். வீதியெங்கும் மமகவினர் மக்கள் உரிமையில் வெளியான அணுஉலை குறித்த செய்தியினை மறுபிரசுரம் செய்து பொதுமக் களைப் போராட்டத்திற்கு ஆயத்தப்படுத்தினர். வெகுஜன ஊடகங்களும் தங்கள் பங்குக்கு மக்களிடம் போராட்டச் செய்தியைக் கொண்டு சென்றது. வார இதழான குமுதம் ரிப்போர்ட்டர், மமகவினரின் போராட்ட வியூகங்களைப் பட்டியலிட்டு, சட்டமன்றப் போராட்டத்தை மமக தலைமையில் எழுச்சியுடன் எதிர்ப்பாளர்கள் திரள உள்ளதை எடுத்துக்காட்டியது.
இந்த பரபரப்பின் எதிரொலியாய் போராட்டம் நடந்த எழும்பூர் இராஜரத்தினம் மைதானத்தில் பல்வேறு காட்சி ஊடகங்களும், நேரடியாக ஒளிபரப்பு செய்ய குவிந்திருந்தனர்.
மாற்று அரசியலை முன்னெடுத்து, அநீதிக்கு எதிராய் ஆர்ப்பரிக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் தொண்டர்கள் குவியத் தொடங்கினர். போராட்டப் பதாகைகளையும், கொடிகளையும் கையில் ஏந்தி, போராட்டக் களத்திற்கு வருகை தந்தவண்ணம் இருந்தனர்.
மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. தலைமையில் தமுமுக மாநில துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம்.அனிபா, மமக ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா, வடசென்னை மாவட்டத் தலைவர் உஸ்மான் அலி, செயலாளர் கள் தமீம், நவீன், துணைச் செயலாளர் முஹம்மது யாசீன் உள்ளிட்ட மமகவினரும், தென்சென்னை மாவட்டத் தலைவர் சீனிமுஹம்மது, பொருளாளர் நாசர், அன்சாரி, கோரி உள்ளிட்ட மமகவினரும், காஞ்சி வடக்கு மாவட்டத் தலைவர் யாகூப், மமக செயலாளர் சலீம் மற்றும் தொண்டர்கள், காஞ்சி தெற்கு மாவட்டத் தலைவர் ஷாஜஹான் தலைமையில் தொண்டர்களும், திருவள்ளூர் மேற்கு மாவட்டத் தலைவர் ஹாரூண் ரஷீத், பொருளாளர் ஷேக் தாவூத், மமக இளைஞர் அணி செயலாளர் அமீர்கான் மற்றும் தொண்டர்கள், திருவள்ளூர் கிழக்கு மாவட்டத் தலைவர் அப்துல் காதர், செயலாளர் புழல் ஷேக், பொருளாளர் உசேன் அலி, துணைச் செயலாளர் ஸ்டீல் மீரான், புழல் பஷீர், அப்துல் சமது உள்ளிட்ட கழக முன்னணியினரும் போராட்டக் களத்தில் குவிந்தனர்.
காவல்துறையின் கட்டுப்பாடுகள், சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலையும் மீறி ஆயிரக்கணக்கான மமகவினரும் ஏனைய அமைப்புகளின் தோழர்களும் போராட்டக் களத்தில் குவிந்தவண்ணம் இருந்தனர். ஆங்காங்கே காவல்துறை, போராட்டக் களத்திற்கு வருகைதரக்கூடிய தொண்டர்களைத் தடுத்து நிறுத்தி, கைது செய்து, கூட்டத்தைக் குறைக்க குறுக்கு வழிகளைக் கையாண்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைப் புகளின் மாநில நிர்வாகிகள் கைது செய்யப் பட்டனர்.
மமக அமைப்புச் செயலாளர் ஈரோடு பாரூக் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 28.10.2012 அன்று கைது செய்யப்பட்டார். திருத்தணி நகர செயலாளர் இக்பால் மற்றும் திருவள்ளூர் நகர மமக செயலாளர் நசீர்கான், பொருளாளர் அலி தலைமையில் புறப்பட்ட கழகத்தின் செயல்வீரர்கள் முன்னெச்சரிக்கையாக பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர். இது போல் தமிழகமெங்கும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டத் துளிகள்:
போராட்டம் நடைபெற்ற எழும்பூர் பகுதியைச் சுற்றிலும் காவல்துறை பாதுகாப்பு அரண் அமைத்திருந்தது. போராட்டக்காரர்களை ஒடுக்க சென்னையின் -நுழைவுப் பகுதிகளில் தற்காலிக செக்போஸ்ட் அமைத்து தீவிர சோதனைகளை காவல்துறை மேற்கொண்டது.
போராட்டம் குறித்த சுவரொட்டிகளை அச்சடிக்கக்கூடாது என வாய்மொழி உத்தரவாக சென்னை மற்றும் சுற்றுவட்டார அனைத்து அச்சக அதிபர்களை அன்பாக(?) அறிவுறுத்தியது காவல்துறை.
போராட்டம் நடந்த பகுதியில் காலை 6 மணியளவில் இருந்து காவலர்களை அதிக அளவில் குவிக்க ஆரம்பித்தது அரசு. போராட்டக்காரர்களை கைது செய்ய மாநகரப் பேருந்துகள் தயார் நிலையில் இருந்தன. அதிக அளவு தொண்டர்களை சமாளிக்க முடியாமல் காவல்துறைப் பேருந்துகள் உடனடியாக வரவழைக்கப்பட்டன.
சென்னையின் இதயப் பகுதியான அண்ணா சாலை, கோட்டை சாலை, கடற்கரைச் சாலை, அண்ணா மேம்பாலம், எழும்பூர் ரயில் நிலையம் போன்ற பகுதிகளில் காவல் அரண் அமைக்கப்பட்டு தயார் நிலையில் காவல் படைகள் குவிக்கப்பட்டிருந்தன.
கண்ணீர்ப் புகை குண்டு துப்பாக்கிகளை ஏந்திய படையினரும், அதிவிரைவு படையினரும் தயார் நிலையில் நிறுத்தியிருந்தது அரசு.
அணுகுண்டையே எதிர்க்கும் ஆற்றல் பெற்றுவிட்டபோது, கண்ணீர்ப் புகை குண்டுகள் எமக்கு எம்மாத்திரம் என எதிர்ப்பாளர்கள் அலைஅலையாய் களத்திற்கு வந்தபோது, கண்ணீர்ப் புகை குண்டுகள் கோலி குண்டுகளாக மாறின.

இடம் மாறியதோ கூடங்குளம்?
தடையை மீறி, காவல் படைகளை அடக்குமுறைகளைத் தாண்டி அரச பயங்கரவாதத்தை எதிர்த்து, சொந்த மக்களை காவு கொடுத்துவிட்டு, ஏகாதிபத்தியத்திற்கு வால்பிடிக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராய் போராட்டக்காரர்கள் தடையை மீறி சட்டமன்ற முற்றுகையைத் தொடங்கினர். போராட்டக்காரர்கள், எழும்பூர் ராணி மெய்யம்மை திருமண மண்டபம் அருகில் தடுப்புகளை வைத்து முன்னேற விடாமல் தடுத்து கைது செய்தது காவல்துறை. மிகச்சரியாக பிற்பகல் 1 மணியளவில் தொடங்கிய கைதுப் படலம், மதியம் 3 மணி வரை நீடித்தது.
அடக்குமுறைக்கு எதிராக, ஒடுக்கப்பட்டோரின் குரலாகத் திரண்ட மக்களை காவல்துறை கைது செய்து அணி அணியாக வாகனங்களில் ஏற்றி அழைத்துச் சென்றது. வெகுஜன மக்களின் தொண்டர்களையும், மக்கள் தலைவர்களையும் ஒன்றாக சிறையில் அடைத்தால் போராட்டம் இன்னும் வீரியமும், வளர்ச்சியும் அடையும் எனக் கருதி தனித்தனி மண்டபங்களில் அடைத்தது காவல்துறை.
கூடங்குளம் சென்னைக்கு இடம் மாறியதோ என்ற அளவில் பல்லாயிரக்கணக்கான அணுஉலை எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டு அன்று மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், ஆங்கிலத்தில் ஓர் சொற்றொடர் உண்டு ‘‘When the First Ball Bowled, the Match was Won’’ அதுபோன்று போராட்டம் அறிவித்த நாளில் நடைபெறவிருந்த சட்டமன்றக் கூட்டத்தை வேறு தேதிக்கு மாற்றிக் கொண்டார்கள். அது எங்களுக்கு கிடைத்த வெற்றி. எங்கள் கூட்டமைப்பின் தோழர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்து போராட்டத்தை அச்சுறுத்த முயன்றார்கள். ஆனால் இங்கு குழுமியுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள், கூடங்குளம் மக்களின் அறவழிப் போராட்டத்திற்கு ஆதரவாக குழுமியிருக்கிறார்கள். போராட்டத்தை அடக்க நினைக்கும் மக்கள் விரோத அரசுகளின் கனவு பலிக்காது. கூடங்குளத்தை இழுத்து மூடும் வரை ஓயமாட்டோம், உறங்கமாட்டோம்” என்றார்.
ஆம் திணறியது சென்னை! தலைநகருக்கு இடம்மாறியது இடிந்தகரை!

நகர்வலம்
கோஷங்களை எழுப்பிய வண்ணம் தடையை மீறி சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தைத் தொடங்கிய மதிமுக, மமக, வி.சி. என வெகுஜன மக்கள் இயக்கத் தொண்டர்களைக் கைது செய்து வாகனங்களில் ஏற்றிய காவல்துறை, கைதானவர்களை அடைத்துவைக்க மண்டபங்கள் இல்லாமல் சென்னை நகரைச் சுற்றி வந்தனர்.
முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், குணங்குடி ஆர்.எம்.அனிபா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்கள் போராட்டப் பகுதியில் கைது செய்யப்பட்டு நீண்டநேரம் அலைக்கழிக்கப்பட்டு மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
மே 17 இயக்கத்தினரின் பதாகைகள் பெரிதும் கவர்ந்தன.
மனிதநேய மக்கள் கட்சியின் எழும்பூர் பகுதி நிர்வாகிகள் ஜாஹிர், சம்சு, ரவூப் ரஹீம் ஆகியோர், சுட்டெரிக்கும் வெயிலில் போராடிய போராளிகளுக்கு தாகம் தீர்க்க குடிநீர் பாக் கெட்டுகளை வழங்கினர்.

போராட்டம் தொடங்கும் முன்பே
தலைகளை எண்ணிப் பார்ப்பவன் அரசியல்வாதி; எதிர்காலத் தலைமுறை களுக்கான பணி செய்பவன் சமூகவாதி. சமுதாய மக்களின் முன்னோடியான தமுமுக, போராட்டக் களங்களில் முதன்மையானது. போராட்டம் தொடங்கும் முன்பே காலை 9.45 மணியளவில் தமுமுக மாநில துணைத் தலைவர் ஆர்.எம்.அனிபா முதன்மையாக வருகைதந்து போராட்டக்காரர்களை உற்சாகப்படுத்தினார்.

சட்டமன்றமும் மமகவும்
தமிழக சட்டமன்றம் வெள்ளி விழா காணும் இத்தருணத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக ஜனநாயக வழியில் போராடும் கூடங்குளம் மக்களுக்காக சட்டமன்றத்தில் குரலெழுப்ப எந்தக் கட்சியும் முன்வரவில்லை.
போராட்டம் தொடங்கிய நாள் முதல் அக்டோபர் 29 வரை கூடங்குளம் மக்களின் தரப்பு நியாயத்தையும், அரசின் இரட்டை நிலைபாட்டையும் அதிவேகமாக விமர்சித்து வந்துள்ளது மனிதநேய மக்கள் கட்சி.
சொந்த மக்களை வஞ்சித்துவிட்டு, ஏகாதிபத்தியத்திற்கு வால்பிடிக்கும் மக்கள் விரோத அரசுகளை அடையாளம் காட்டிய ஒரே அரசியல் கட்சி மனிதநேய மக்கள் கட்சி மட்டுமே.

ஷமீம் அஹ்மத்


No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...