இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Thursday, April 12, 2012

குஜராத் கலவரம்: 23 பேர் உயிருடன் எரிக்கப்பட்ட வழக்கில் 18 பேருக்கு ஆயுள் தண்டனை!

குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு ஏற்பட்ட மதக் கலவரத்தின்போது ஓடே கிராமத்தில் 23 பேரை உயிருடன் தீவைத்து கொன்ற வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களில் 18 பேருக்கு ஆயுள் தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து குஜராத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 18 பேருக்கும் தலா ரூ. 5800 அபராதம் மற்றும் 7 ஆண்டு தண்டனை பெற்ற ஐவருக்கும் தலா ரூ. 3800 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பைக் கேட்டதும் கோர்ட்டுக்கு வந்திருந்த பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் கடும் கோபமடைந்தனர். பலர் வாய் விட்டுக் கதறி அழுதனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் கூறுகையில், குற்றவாளிகளுக்கு எதிராக எந்தவிதமான ஆதாரத்தையும் அரசுத் தரப்பு சமர்ப்பிக்கவில்லை. இது அநீதியானது. இந்த கோர்ட் நீதியின் ஆலயமல்ல என்று அவர்கள் குமுறினர்.

குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கோர்ட்டில் கூடியிருந்தனர். அத்தனை பேரும் தீர்ப்பை எதிர்த்துக் கோஷமிட்டனர். இருப்பினும் அவர்களைப் போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

கடந்த 2002ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி குஜராத் முழுவதும் பெரும் மதக் கலவரம் மூண்டது. இந்த நிலையில், ஆனந்த் மாவட்டம் ஓடே கிராமத்தில் புகுந்த வெறியர்கள், அங்கிருந்த முஸ்லீம்களைக் குறி வைத்துத் தாக்கத் தொடங்கினர். அப்போது ஒரு 3 மாடிக் கட்டடத்தில் முஸ்லீ்ம் குடும்பங்களைச் சேர்ந்த 9 குழந்தைகள் உள்பட 23 பேர் உயிருக்குப் பயந்து பதுங்கியிருந்தனர். அப்போது அந்த வீட்டை வெறியர்கள் தீவைத்து விட்டனர். இதில் 23 பேரும் உயிரோடு எரிந்து சாம்பலாயினர்.

இந்தக் கோரச் சம்பவத்தில் மஜீத் மியான் என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இவரது குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்திற்குப் பின்னர் குஜராத்தில் நடந்த மிகப் பெரிய மதவாத தாக்குதலில் ஓடே கிராம சம்பவமும் ஒன்றாகும். இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுப் படை விசாரித்து வந்தது. இந்த வழக்கில் 150 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். ஆனால் அவர்களில் 35 பேர் பிறழ் சாட்சியாகி விட்டனர்.

இந்தக் கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்டுக் கைதான 47 பேர் மீது ஆனந்த் நகரில் அமைக்கப்பட்ட சிபிஐ சிறப்பு கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட், கடந்த திங்கள்கிழமையன்று 23 பேர் குற்றவாளிகள் என்றும், 23 பேர் விடுதலை செய்யப்படுவதாகவும் தீர்ப்பளித்தது. ஒருவர் விசாரணையின்போதே இறந்து போய்விட்டார்.

தற்போது தண்டனைக்குள்ளாகியுள்ள 46 பேரும் ஜாமீனில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் நடந்த 9 மதக் கலவர வழக்குகளில் தற்போது 2வது வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 33 பேரின் உயிரைப் பறித்த சர்தார்புரா படுகொலை வழக்கில் 31 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்புக் கோர்ட் தீர்ப்பளித்தது.

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...