இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Thursday, February 23, 2012

சங்கரன்கோவில் கலவரம்: நடந்தது என்ன??



சங்கரன்கோவிலில் கடந்த 7.2.2012 அன்று இரவு 7.30 மணியளவில் காளியம்மன் கோவில் கொடை விழா ஊர்வலம் நடைபெற்றது. கழுகுமலை சாலையில் ஜும்ஆ பள்ளிவாசலின் அருகில் ஊர்வலம் வந்தபொழுது பள்ளிவாசல் முன்பு பட்டாசுகளை வெடித்தும், மேளதாளங்கள் அடித்தும் பள்ளிவாசலில் உள்ளே செருப்புகள் மற்றும் கற்கள் எறிந்தும் வன்முறையில் தலித் சமுதாய மக்களில் சிலர் ஈடுபட்டு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளனர்.



இவ்விஷயம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட, பாதுகாப்புக்காக மூன்று போலீசார் மட்டுமே வந்துள்ளனர். இதனிடையே ஊர்வலம் பஜார் வீதிகளுக்குச் சென்று திரும்பியபோது இரவு சுமார் 8.30 மணியளவில் மீண்டும் பட்டாசுகள் வைத்து வெடித்துள்ளனர். போலீசார், அவர்களைக் கண்டித்தபோது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீசார்களையும் பின்பு இஷா தொழுகை முடித்துவிட்டு வெளியில் வந்த முஸ்லிம்களையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். முஸ்லிம்களில் சிலர் பதிலடி தர, இது கலவரமாக வெடித்தது.

இந்தக் கலவரத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 50 கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. கடைகளில் உள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. மேலும் கார்கள், வேன்கள், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மற்றும் ஊனமுற்றோருடைய வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதில் சங்கரன்கோவில் காயிதே மில்லத் 5 மற்றும் 6ம் தெருவில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்து அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளனர்.


சில முஸ்லிம்கள் குடியிருப்பதற்கு வீடுகள் இல்லாமல், தலித்துகளின் தெருக்களில் வசித்து வந்தனர். கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தேவேந்திரகுல மக்களால் அவர்கள் அடித்து விரட்டப்பட்டனர். வீட்டுக்குள் பயந்து உள்ளே இருந்த மக்களையும் வெளியே வரவழைப்பதற்காக ஈவிரக்கமின்றி விஷப்பூச்சி மருந்துகளை வீட்டுக்குள் தெளித்து வெளியில் விரட்டப்பட்டுள்ளனர்.

சுமார் இரண்டரை மணி நேரம் கலவரம் நீடித்தது. இரவு சுமார் 11 மணியளவில் கலவரத் தடுப்பு போலீசார் வந்து கலவரத்தைக் கட்டுப்படுத்தினர்.

இதனையொட்டி இருதரப்பிலிருந்தும் 19 நபர்களை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்பில்லாத திவான் அலி என்ற படிக்கும் மாணவரையும், மனநோயாளியான செய்யது அலி என்ற வாலிபரையும் கைது செய்தனர்.

டி.ஐ.ஜி. வரதராஜு, எஸ்.பி. விஜயேந்திரபிதலி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இத்தகவல் கிடைத்ததும் தமுமுக மாவட்டத் தலைவர் எஸ். மைதீன் சேட்கான், மாவட்டச் செயலாளர்கள் நயினார் முஹம்மது, திவான் மைதீன், துணைச் செயலாளர் சேகண்ணா, விவசாய அணி செயலாளர் சுலைமான் ஆகியோர் உடனடியாக சங்கரன்கோவில் விரைந்தனர். மாநில நிர்வாகிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.

மூத்த தலைவர்கள் பேரா. ஜவாஹிருல்லாஹ், செ. ஹைதர் அலி, தமுமுக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, மமக பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி ஆகியோர் உடனடியாக நெல்லை சரக டி.ஜி.ஜி. மற்றும் மாவட்ட எஸ்.பி. ஆகிய காவல்துறை உயர் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, கலவரத்தைக் கட்டுப்படுத்துமாறும், கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.

இந்நிலையில் சுமார் 10.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்து எஸ்.பி. மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பாதுகாப்பை பலப்படுத்துமாறு மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தினர். இரவு முழுவதும் சமுதாய மக்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கிடைக்க வழிவகை செய்தனர்.


இந்தக் கலவரத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான முஸ்லிம்களின் சொத்துகள் நாசமாயின. இதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் கடையடைப்பு நடத்தி முஸ்லிம்கள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதனால் தொடர்ந்து மூன்று நாட்கள் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் கடந்த 10.02.2012 அன்று நடந்த பேச்சுவார்த்தையில் இருசமுதாய மக்களும், ஆர்.டி.ஓ. இளங்கோ தலைமையில் கூடினர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அமைதியான சூழ்நிலை தற்போது நிலவிவருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் நெல்லை மேற்கு மாவட்ட தமுமுக தலைவர் எஸ். மைதீன் சேட்கான் கலந்துகொண்டார்.



சங்பரிவாருக்கு தொடர்பு?

சங்கரன்கோவில் கலவரத்தில் ஆர்எஸ்எஸ் கும்பல் ஈடுபட்டது வெட்டவெளிச்சமாகியுள்ளது. கலவரத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டோரில் தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் உள்ளதாக ஆர்எஸ்எஸ்ஸின் அரசியல் பிரிவான பாஜக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாஜகவின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கையில், சங்கரன்கோவில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளதாக கைது செய்யப்பட்டவர்களில் அன்புராஜ், வழக்கறிஞர் சாக்ரடீஸ், மாவட்ட நிர்வாகிகள் செந்தூர்பாண்டியன், பழனிச்சாமி, ஆறுமுகசாமி ஆகியோர் தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் சங்கரன்கோவில் பாஜக வேட்பாளர் தேர்வுக்காக சென்றவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



களத்தில் தமுமுக நிர்வாகிகள்

சங்கரன்கோவிலில் கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நெல்லை மேற்கு மாவட்ட தமுமுக தலைவர் எஸ். மைதீன் சேட்கான், மமக மாவட்டச் செயலாளர் நயினார் முஹம்மது, மாவட்டப் பொருளாளர் பொட்டபுதூர் மீரான், நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் மைதீன் பாரூக், மமக மாவட்ட செயலாளர் ரசூல் மைதீன் ஆகியோர் சங்கரன்கோவிலில் மூன்று நாட்களும் தங்கியிருந்து கலவரம் மீண்டும் நடைபெறாமல் அமைதி நிலவ பாடுபட்டனர்.

தகவல்:- தமுமுக இணையளதம் : www.tmmk.in

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...