- எம். தமிமுன் அன்சாரி
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் வந்துவிட்டாலே மனசெல்லாம் மழைத் தூறல்களில் நனையும்! கார்த்திகை மாதம் கடும் மழை; ஐப்பசி மாதம் அடைமழை என்பார்கள்.
இம்மாதங்களில் மழையோ மழைதான்! கோடை கால கொடுமைகள் விடுபெற்று; குளிர்காற்றும்; தொடர் மழையும்; இடிமுழக்கமும்; மின்னல் வெட்டுகளும் மழைக்கால பொழுதுகளை இன்பமாக்கும். மேகங்கள் ஊர்வலம் போகும் அழகே அழகுதான்.
விடிகாலை இருளில் நடை பயில்வதே தனி சுகமாக இருக்கும். ஆறு, ஏரி, கிணறு குளங்களில் தண்ணீர் குளிப்பதற்கு இதமாக, சூட்டோடு வரவேற்கும். அப்போது உடம்பு ஒருவகை சுகத்தை உணரும். தாமதமாய் விடியும் காலையும், முன்கூட்டியே இருள் கவ்வும் மாலையும் மயக்கத்தைத் தரும்.
இக்காலக்கட்டங்களில் தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் நெல் விவசாயம் செழித்தோங்கி நிற்கும். எங்கும் தண்ணீர் தேசமாய் காட்சியளிக்கும். வாய்க்கால்களில் குரவை, விறால், கெண்டை, ஜிலேபி ரக மீன்கள் துள்ளியோடும். தூண்டில்களோடு சிறுவர்கள் மீன் பிடிப்பார்கள். அதை கொத்திச் செல்வதற்கு மீன்கொத்தி பறவைகளுக்குப் போட்டியாக கொக்குகளும், மடையான்களும் அலை, அலையாய் பறக்கும். சிரவிகளும், நீர்க்கோழிகளும் ஆறு, ஏரிகளில் உலாவரும். அதைப் பிடிக்க வேட்டையாடிகள் சுற்றுவார்கள்.
கரையோடு கதை பேசிக் கொண்டு நகரும் நதியில் முதுகில் காட்டுச் செடிகளும், பூக்களும் ஊர்வலம் போகும்.
பசுமைப் போர்வை போர்த்திய பெருமையில் வயல்கள் காற்றாடி சிரித்துக் கொண்டிருக்கும். அப்போது சாலைப் பயணங்களில் விழிகள் ரசிக்க நகர்வதே ஒரு பொழுதுபோக்காக இருக்கும்.
உழவர்கள் நாற்று நடுவதும், களையெடுப்பதுமாக தங்கள் பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கு குனிந்தபடியே இயங்கிக் கொண்டிருப்பார்கள்.
மழைத்தூறல்கள் வலுக்கும்போது கிராமங்களில் கிலுவைப் போன்ற மரங்களை வெட்டி வீடுகளுக்கு வேலி வைப்பார்கள்.
ஆடு, மாடுகளைப் பராமரிப்பதில் மிகுந்த கவனம் செலுத்துவார்கள். மேய்ச்சல் நிலங்கள் பசுமையாக இருக்கும்.
பனங்கிழங்குகளும், மரவெள்ளிக்கிழங்குகளும், சர்க்கரைவள்ளிக் கிழங்குகளும் வீதி, வீதியாக விற்பனைக்கு வரும். மழைக்கால மாலைப் பொழுதுகளில் சூடாக சாப்பிடுவது ஒருவகை மகிழ்ச்சியாக இருக்கும்.
வீட்டுத் தோட்டங்களில் பீர்க்கைச் செடிகள் பூப்பூத்து காய் காய்க்கும். செடிகளுக்குள் பச்சை நிறத்திற்குள் பச்சையாக ஒளிந்திருக்கும் பீர்க்கையைத் தேடி, தேடி பறிப்பது ஒரு காலை நேர கடமையாகவே இருக்கும்.
கரும்பு, நிலக்கடலை என சாகுபடிகள் பலவேறாக இருக்கும். கதிர் அரிவாளோடு அலையும் விவசாயத் தொழிலாளர்கள், இவ்வருடம் பொங்கல் எப்படி இருக்குமோ? என பொருளாதார நிலைக் குறித்த கவலையோடு ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வார்கள். ஒருவழியாக மழைக்காலம் விடைபெறும்.
மார்கழியில் பனிக்கொட்டும். வாடைக்காற்று வீசும். ஒரு போர்வைக்குள் ஒளிந்துகொள்ள உடம்பு துடிக்கும்.
மழைக் காலத்திலிருந்து மாறிடும் பனிக்காலம், அறுவடையின் பொற்காலமாகும். பச்சை வயல்கள் கதிர் முற்றி; தலைசாய்ந்து; வயலுக்கு வந்த பெண்ணின் வெட்கத்தோடு; தலைகவிழ்ந்து பொன்னிறமாக காட்சியளிக்கும்.
இளங்காலையில் ஈர புற்களில் பனித்துளிகள் மகுடம் சூட்டியிருக்கும். ஆங்காங்கே தண்ணீர் பரப்புகளிலிருந்து பனிப்புகை எழும் காலைப் பொழுதுகள் ரம்மியமானவையாக காட்சி தரும். பெரும்பாலோர் கதகதப்பை தரும் போர்வைகளோடு வெளியே வருவார்கள். ஒரு சூடான தேனீர் அவர்களை உசுப்பேற்றும்.
மார்கழி இறுதியிலிருந்தே அறுவடை தொடங்கி நடைபெற்று, களத்தில் கட்டுக்கட்டாக கதிர்கள் அடுக்கப்பட்டு வைக்கோலும், நெல்மணிகளும் பிரிக்கப்படும். தார்ச் சாலைகளில் வைக்கோல் பரத்தப்பட்டு கட்டுகளாக மாற்றப்படும். இவையனைத்தையும் இயந்திரங்கள் இப்போது செய்கின்றன. சிறு விவசாயிகள் பழைய முறைகளைப் பின்பற்றுகிறார்கள்.
இரட்டை மாட்டு வண்டிகள், டிராக்டர்கள், மினி லாரிகளில் மூட்டை, மூட்டையாய் நெல் பயணப்படும். வீடுகளுக்கு நெல் வருவதே கொண்டாட்டாக இருக்கும். உறவுகள் கூடி ‘புதிய அரிசி சோறு’ என குடும்ப விருந்துகள் நடக்கும். காய்கறி ஆணம் மணக்கும். கரும்புகளும், வாழைப் பழங்களும் விருந்துக்கு வலு சேர்க்கும்.
சேற்றில் உழைத்த விவசாயிகள் கூலிகளைப் பெற்றுக் கொண்டு பொங்கலுக்கு புதுத்துணிகளை எடுக்க குடும்பத்தோடு நகர்ப்புறங்களுக்கு வருவார்கள். கிராமச் சந்தைகள் களை கட்டும்.
விவசாயத் தொழிலாளர்களுக்கு புயல், வெள்ளம் வந்தால் அவர்களுக்குப் பொங்கல் இல்லை. அது கறுப்பு பொங்கலாக கணக்கும். இவ்வருடம் போல் பருவகாலம் அமைந்திருந்தால் அவர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுவார்கள். சர்க்கரைப் பொங்கல் அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்.
இன்று காலம் மாறிவிட்டது. இயற்கை விவசாயம் அழிந்து, சுற்றுச்சூழல் சீர்கெட்ட இக்காலங்களில் சர்க்கரைப் பொங்கலை விட ‘பீட்ஸா’ சாப்பிடும் நாகரீகத்திற்கு தமிழர்கள் முன்னேறி விட்டார்கள்.
பொங்கல் போன்ற அறுவடைக் கொண்டாட்ட தினங்களுக்கு கிராமங்களுக்குச் சென்று மகிழ்வதில் யாருக்கும் ஆர்வமில்லை. நகர்ப்புற நெருக்கடிகளுக்கு வாழ்க்கையைப் பறிகொடுத்தவர்களுக்கு பொங்கலின் நோக்கம் புரிவதில்லை.
பொங்கலை 10 நாள் போனஸோடும், 5 நாள் அரசு விடுமுறைகளோடும் கொண்டாடும் யாரும், விவசாயத்தின் வளர்ச்சி குறித்தோ கவலைப்படுவதில்லை. அவர்கள் விவசாயிகளின் துயரங்கள் குறித்தோ கவலைப்படாமல் விடுமுறை தின மகிழ்ச்சியாக ‘பொங்கலை’ அனுபவிக்கிறார்கள். வழக்கமான வாழ்த்துச் செய்திகளில் உயிர் இல்லை; போலித்தனங்கள் மிகைக்கின்றன. அறுவடைத் திருநாள் ‘ஹேப்பி’ பொங்கலாகி விட்டது.
தாய்லாந்து, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், ஸ்பெயின் என பல நாடுகளில் பொங்கல் அறுவடைத் திருநாளாக; வழிபாடுகளற்ற பொருளாதார ஏற்றத்தைப் பகிர்ந்து கொள்ளும் மகிழ்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.
மாட்டுப் பொங்கல் விளையாட்டு நிகழ்வாகவும், தைப்பொங்கல் பொருளாதார சுழற்சியை முன்னிறுத்திய அறுவடைத் திருநாளாகவும் கொண்டாட வேண்டியவை. அதை ஒருசார்பு நிகழ்வாகவும், வழிபாட்டு முறையாகவும் மாற்றியது யார்?
ஜனவரி 11 அன்று ‘தி ஹிந்து’ தமிழ் நாளிதழில், ‘வெட்டிவேரு வாசம்’ பகுதியில் இதே கேள்வியை இயக்குநர் தங்கர்பச்சான் எழுப்பியிருந்தார். அதை நானும் வழிமொழிகிறேன்.
பொங்கல் பருவக் காலங்களையொட்டி உழவர்கள் கொண்டாடும் மகிழ்ச்சிக்குரிய ஒரு நிகழ்வாகும். அதை சடங்குகளுடனும், வழிபாடுகளுடனும் ஆதிக்க சக்திகள் திசைமாற்றி விட்டார்கள்.
இனிவரும் காலங்களில் பொங்கல் என்பது இயற்கை விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும் முன்னிறுத்தி விவசாயத்தை வளர்த்தெடுக்கும் நிகழ்வாகவும், தமிழக மக்கள் எல்லோரும் பங்கேற்கும் ஒற்றுமை தினமாகவும் மாற்றப்பட வேண்டும்.
வாழ்க்கையை இயற்கையாகவும், இயற்கையை வாழ்க்கையாகவும் வாழ கற்றுக்கொள்வோம். வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment