இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Wednesday, August 24, 2016


பாதுகாப்பானதா கூடங்குளம் உலை?




அணுஉலை விஷயத்தில் தமிழக அரசின் செயல்பாடு, தமிழக மக்களின் கண்களாக இருக்க வேண்டும்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா மூன்று தலைவர்களும், காணொளி மூலம் கூடங்குளம் அணுஉலையின் அடுத்தடுத்த அலகுகளை இந்திய நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கின்றனர். அணுசக்தி தேவையா, தேவையில்லையா எனும் விவாதத்தில் இருவேறு கருத்துகளுக்கு இடம் இருக்கலாம்; பாதுகாப்பு ஏற்பாடுகளில் அப்படி இருவேறு கருத்துகளுக்கு இடம் இருக்க முடியாது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்நிகழ்ச்சியில் பேசுகையில், “கூடங்குளம் அணுஉலை குறித்து மக்களின் சந்தேகங்களைப் போக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டது. மக்களின் அச்சங்களைப் போக்க அரசு நடவடிக்கை எடுத்தது. கூடங்குளம் அணுஉலை உயர் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது. கூடங்குளத்தைச் சுற்றியுள்ள பகுதி மக்களின் வளர்ச்சிக்கு தமிழக அரசு உறுதுணையாக உள்ளது” என்றெல்லாம் பேசியிருக்கிறார். இதே ஜெயலலிதா, கடந்த 2013 அக்டோபர் 13 அன்று, தூத்துக்குடியில் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது “கூடங்குளம் அணுமின் நிலையத்தைப் பொறுத்தவரை, உள்ளூர் மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழக அரசு நிச்சயம் செயல்படும். இந்தப் பிரச்சினையில் உங்களில் ஒருத்தியாக நான் இருப்பேன்” என்று குறிப்பிட்டது இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டியது. இத்தகைய பின்னணியில் முதல்வர் ஜெயலலிதா தன்னுடைய சமீபத்திய உரையில் குறிப்பிட்டிருக்கும் ‘பாதுகாப்பு உறுதி’ எந்த அளவுக்கு உண்மையானது?
கள யதார்த்தம்
இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் 1989-ம் ஆண்டிலேயே “கூடங்குளம் அணுஉலையிலிருந்து வரக்கூடிய அணுக் கழிவுகளை அணுஉலை பக்கத்திலேயே சேமிக்காமல், தொலைதூரத்தில் சேமிக்க வழி காண வேண்டும்” என்று கூறியுள்ளது. 2013-ல் உச்ச நீதிமன்றமும்கூட இதை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உத்தரவிட்டது. ஆனால், இன்றுவரை நடக்கவில்லை. ‘‘உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைகளில் இரு பரிந்துரைகளை நிறைவேற்ற நீண்ட காலம் தேவைப்படும்’’ என்று அணுசக்தித் துறை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நிறைவேற்றப்படாத இந்த இரண்டு பரிந்துரைகளும் அணுஉலையில் உள்ள ரியாக்டரின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பானவை. இத்தகைய பாதுகாப்பு அம்சங்களை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை.
நான் பல முறை சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தேன், ‘‘தமிழக அரசு அமைத்ததாகக் கூறும் நிபுணர் குழுவின் அறிக்கையைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று. இதுநாள் வரை தாக்கல் செய்யப்படவில்லை. என்ன காரணம்? கூடங்குளம் அணுஉலையை எதிர்த்துப் போராடும் மக்களிடம் அந்தக் குழு எவ்விதக் கருத்துக்கேட்பு நிகழ்ச்சியையும் நடத்தவில்லை; மக்களின் அச்சங்களைப் போக்கும் எந்தவொரு நடவடிக்கைகளிலும் யாரும் ஈடுபடவில்லை. கூடங்குளம் மற்றும் அதைச் சுற்றி வாழும் மக்களுக்குப் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி எதுவும் இந்நாள் வரை அளிக்கப்படவில்லை. அணுஉலையில் விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை அளிக்க அருகில் ஒரு பன்னோக்கு மருத்துவமனைகூட அமைக்கப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சு எந்த அளவுக்கு உண்மைச் சூழலைப் பிரதிபலிக்கிறது?
பாதுகாப்பு ஓட்டைகள்
2014 அக்டோபரில் கூடங்குளம் அணுஉலையில் உள்ள முதல் அலகில் டர்பைன் என்று சொல்லக்கூடிய விசையாழியின் கத்திகள் உடைந்து, அவ்விசையாழிகள் கடுமையாகச் சேதமாகியுள்ளன என்று தகவல்கள் வெளியாயின. இதற்குச் சில மாதங்களுக்கு முன்பு அணுஉலையின் வால்வில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக ஆறு ஊழியர்கள் பலத்த காயத்துக்கு இலக்கானார்கள் என்ற தகவல் வெளியானது. ஜூலை 2013-ல் கூடங்குளம் அணுஉலையின் முதல் அலகு செயல்பாட்டுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகும்கூட, ஏறத்தாழ ஒன்றரை ஆண்டு காலம் அரைகுறையாகவே செயல்பட்டுவந்தது. இந்த இரண்டு வருடங்களில் கூடங்குளம் அணுஉலை பழுதடைந்து 32 முறை இயக்கம் நின்றிருக்கிறது என்கிறார்கள்.
இந்திய அணுசக்தி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன், “கூடங்குளம் அணுஉலையில் நிறுவப்பட்டுள்ள இயந்திரங்கள் மற்றும் பாகங்கள் தரமற்றவை” என்று பகிரங்கமாக அறிவித்தார். “கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது” என்றும் “அணுஉலை உபயோகத்துக்கு ஊழல்கள் நிறைந்த ரஷ்ய நிறுவனங்களிடமிருந்து வாங்கப்பட்ட அனைத்தும் தரமற்ற கருவிகள்” என்றும் “உடனே அலகு மூன்று மற்றும் நான்கைத் தொடங்குவதற்கான பணிகளை நிறுத்த வேண்டும்” என்றும் இந்திய கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ராம்தாஸ் தலைமையிலான குழு பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் அனுப்பியது.
விஸ்வநாதனின் சப்பைக்கட்டு
சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, கூடங்குளம் அணுஉலையின் செயல்பாடுகள் தொடர்பாக ஆகஸ்ட் 7, 2014 அன்று நான் சில முக்கியமான குறைகளைச் சுட்டிக்காட்டினேன். அதற்குப் பதிலளித்த அன்றைய எரிசக்தித் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், “சந்தேகப்படுவதற்கோ அல்லது ஐயமுறுவதற்கோ ஏதுமில்லை” என்று சப்பைக்கட்டு கட்டினார்.
அக்டோபர் 23, 2013 அன்று கூடங்குளம் அணுஉலை மின்இணைப்பில் சேர்க்கப்பட்டது முதல் 840 நாட்களில் 372 நாட்கள் மட்டுமே இயங்கியுள்ளது என்பது தமிழக முதல்வரின் கவனத்துக்கு வரவில்லையா அல்லது தெரிந்தும் மறைக்கிறாரா?
கூடங்குளம் அணுசக்தி நிலையத்தைச் சுற்றியுள்ள 30 கி.மீ. சுற்று எல்லையில் 10 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். அணுஉலையில் விபத்து ஏற்பட்டால், இந்த மக்களை வெளியேற்றிக் காப்பாற்றுவதற்கு உருப்படியான திட்டம் ஏதும் அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழக மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வுரிமை சம்பந்தப்பட்ட அளவில், இந்த அணுஉலையின் பாதுகாப்புத் தன்மை கேள்விக்குறியாகவே உள்ளது. உலகிலேயே மிக அதிக பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை அணுஉலை விபத்துகள்தான். மேலை நாடுகளில் இவற்றைக் கண்காணிப்பதற்குச் சுயேச்சை அதிகாரமுள்ள அமைப்புகள் உள்ளன. இந்தியாவில் அப்படி எதுவும் இல்லை. எனவே, அணுஉலைகளின் பாதுகாப்பு என்பது மர்மமான இரும்புத் திரையாகவே உள்ளது.
மத்திய - மாநில அரசுகள் வளர்ச்சி என்ற மந்திரச் சொல்லால் எல்லோர் வாய்களையும் அடைத்துவிட முடியாது. கூடங்குளம் அணுஉலை இந்திய அணுசக்தித் துறையின் பெருமிதங்களில் ஒன்றாக இருக்கலாம். ஆனால், தமிழகத்தைப் பொறுத்த அளவில் அது பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உயிராதாரப் பிரச்சினை. கூடங்குளம் அணுஉலையில் அடுத்தடுத்த அலகுகளை விரிவாக்கும் முன் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுப்பது முக்கியம். இந்த விஷயத்தில் தமிழக அரசின் செயல்பாடு தமிழக மக்களின் கண்களாக இருக்க வேண்டுமே ஒழிய; மத்திய அரசின் வாயாக ஒலிக்கக் கூடாது!
கட்டுரையாளர் - மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்,
தொடர்புக்கு: jawahirinfo@gmail.com

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...