இந்தியாவின் பெருமையினை குலைக்கும் விதமாக குஜராத்தில் நடைபெற்ற இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று வரை நிவாரணம் கிடைக்க வில்லை. வீடிழந்து, வாழ்விழந்து வானமே கூரையாக வாழ்ந்துவரும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் களின் அவலக்குரல் செவிடன் காதில் ஊதிய சங்காக ஆயிற்று.
2002ல் மாபெரும் இனப்படு கொலை நிகழ்த்திய மோடி அரசு உலகெங்கும் கடும் கண்டனத்திற்கு இலக்கானது. மோடிக்கு வெளிநாடுகளில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட போதும் உள்நாட்டில் சில சக்திகள் மோடிக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வந்தன.
கருணை காட்டப்பட வேண்டிய அப்பாவி ஜீவன்களின் நிலை தொடர்ந்தபடியே இருந்தது.
குஜராத் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் நிவாரண உதவிகள் வழங்கப்படாத நிலையைத் தொடர்ந்து இரண்டு சமூகநல ஆர்வலர்கள் குஜராத் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப் பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனக்கூறி காலக்கெடு விதித்துள்ளது உயர்நீதிமன்றம்.
தலைமை நீதிபதி எஸ். முகபோத்யாயா, நீதிபதி அகீல் குறைஷி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் தனது தீர்ப்பில், எதிர்வரும் ஜூன் 17ஆம் தேதிக்குள் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டுத் தொகைகளை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
எட்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னமும் நீதியும் நிவாரணமும் கிடைக்காத அவலநிலையில் ஏராளமான மக்கள் தவித்து வருவது ஒரு தேசிய அவமானம் அல்லவா?
தீஸ்தா செதல்வாட், முகுல் சின்ஹா, ஜாகியா ஜாஃப்ரி என நீதிக்காகப் போராடும் பெருமக்கள் முனைப்புடன் சட்ட யுத்தத்தை நிகழ்த்திய போதும் நீதி வெல்ல இன்னும் நெடுங்காலம் காத்திருக்க வேண்டியுள்ளது.
மோடிக் கூட்டத்திற்கு தண்டனை எப்போது?
- TMMK.in
No comments:
Post a Comment