இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Tuesday, April 13, 2010

ஒபாமாவின் 'மாற்றம்', மாறாது நிலைக்குமா?

"இஸ்லாமியத் தீவிரவாதம்", "ஜிஹாதி பயங்கரவாதம்" தொடங்கி, "இன்னொரு சிலுவைப் போர்" வரை, இஸ்லாத்தின் மீது காழ்ப்பைக் கக்கும் சொல்லாட்சிகளை உலகுக்கு அறிமுகப் படுத்திய அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் மூலமாக அமெரிக்காவுக்கு ஏற்பட்ட களங்கத்தை, "மாற்றம்" என்ற ஒற்றை முழக்கத்தோடு பதவிக்கு வந்திருக்கும் அதிபர் பராக ஒபாமா துடைக்க முயலுவதாகத் தெரிகிறது.

'அமெரிக்காவின் பாதுகாப்புத் தொலைநோக்கு' எனும் திட்ட வரைவுகளிலிருந்து "இஸ்லாமியத் தீவிரவாதம்" எனும் சொல்லை நீக்குவதற்கு அண்மையில் ஒபாமாஆணை பிறப்பித்திருக்கிறார்.

"அமெரிக்கா போரிடப் போவது பயங்கரவாதிகளுடனே அன்றி, இஸ்லாத்துடனோ முஸ்லிம்களுடனோ அல்ல. ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் தீவிரவாதிகள் எனும் கண்ணோட்டத்தோடு அமெரிக்கா பார்க்காது" என்று அதிபர் பதவி ஏற்றவுடன் ஒபாமா செய்த அறிவிப்பு, இப்போது அரசு ரீதியான செயல்பாட்டுக்கு வரத் தொடங்கி இருக்கிறது என எதிர்பார்கலாம்.

மேற்காணும் ஆணை செயலுக்கு வந்தால், அரசின் உயர்மட்ட அளவில் மட்டுமின்றி, அமெரிக்காவின் 'யூத லாபி'யிலும் பெருத்த 'மாற்றம்' ஏற்படுத்தும் என நம்புவதற்கு வாய்ப்பிருக்கிறது.

முந்தைய புஷ் நிர்வாகம், தனது பாதுகாப்புக் கொள்கையில், "21ஆம் நூற்றாண்டின் மாபெரும் போராட்டமாக இஸ்லாமிய அடிப்படைவாதத்துடனான கொள்கைப்போரையே அமெரிக்கா கருதுகிறது" என்று குறிப்பிட்டிருந்தது. முஸ்லிம் நாடுகளைக் குறித்து ஒருமுறை "ரவுடி நாடுகள் (Rogue States)" என்றும் "சாத்தானின் அச்சு (Axis of Evil)" என்றும் வர்ணித்த புஷ், இஸ்லாத்தை, "கொடூரமான தீய மதம் (Evil and Wicked Religion)" என்றும் குறிப்பிட்டவராவார்.

"இஸ்லாமிய பயங்கரவாதம், இஸ்லாமிய ஜிஹாத், இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்ற, தீவிரவாதத்துடன் மதத்தை இணைக்கும் சொல்லாட்சிகளைத் தவிர்த்துக் கொள்ளுமாறு முந்தைய அரசுக்கு நான் பலமுறை பரிந்துரைத்தேன்; ஆனால் பயனில்லாமல் போனது. ஏனெனில், மேற்காணும் சொற்களைச் செவியுறும் ஒரு முஸ்லிம், தம் மதத்தின் மீதான தாக்குதலாகவே அவற்றைக் கருதுவார். அப்படிக் கருத வேண்டும் என்றுதான் உஸாமா பின் லேடன் விரும்புவார்" என்று கூறுகிறார் காரன் ஹ்யூகஸ். இவர் முன்னாள் அதிபர் புஷ்ஷின் அரசில் முஸ்லிம் உலகினரோடு உறவு கொண்டாடுவதற்கான மேல்மட்ட அதிகாரியாக இருமுறை பதவி வகித்தவராவார்.

அணுஆயுதக் குறைப்பு, குவாண்டனாமோ சிறை மூடுவிழா போன்ற புஷ் நிர்வாகத்துக்கு எதிரான தனது கொள்கையைப் படிப்படியாகச் செயலுக்கு கொண்டு வரும் ஒபாமாவின் திட்டங்களில், "இஸ்லாமியத் தீவிரவாதம்" என்ற சொல்லைப் பயன்படுத்தத் தடைவிதித்தல் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.


உலகளாவிய முஸ்லிம்களுடனான நேசக்கரம் நீட்டலின் ஒரு பகுதியாகவே அமெரிக்க அதிபரின் ஆணை பார்க்கப் படுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். "அமெரிக்கா முஸ்லிம்களின் எதிரி இல்லை என்றும் தீவிரவாதிகளை ஒடுக்குவதில் மட்டுமே அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்கும்" என்றும் ஒபாமா வலியுறுத்தி வருவதன் ஓர் அங்கமே இது என்றும் கூறுகிறார்கள்.

கடந்த ஜூன் 4, 2009இல் கெய்ரோவில் உரையாற்றிய ஒபாமா, "புதிய தொடக்கம்" எனும் தலைப்பில் இதே கருத்தை வலியுறுத்தியது நினைவிருக்கலாம்.

"உலகின் இரண்டாவது பெரும்பான்மையினர் பின்பற்றும் இஸ்லாத்தைப் பழித்துக் கொண்டு முஸ்லிம்களுடன் நேசக்கரம் நீட்டுவதாகக் கூறுவது ஒன்றுக்கும் உதவாது" என்று ஒபாமாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் அங்கம் வகிக்கும் பிரதீப் ராமமூர்த்தி உருப்படியாக ஆலோசனையைக் கூறியிருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க யூத லாபியை மீறி, 'மாற்றம்' மாறாமல் செயலுக்கு வந்தால், அமெரிக்காவைப் பற்றிய உலக முஸ்லிம்களின் மனதில் உள்ள வெறுப்பு, படிப்படியாக நீங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது. அந்த வாய்ப்பை வழங்குவதில் ஒபாமா உறுதியுடன் இருப்பாரா?

எதிர்காலம் பதில் சொல்லும்!

-நன்றி சத்தியமார்க்கம்.காம்

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...