தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர்களில் ஒருவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் பொருளாளருமான குணங்குடி ஆர்.எம். அனிபா அவர்கள் மீது பல்வேறு பொய் வழக்குகள் புனையப்பட்டு அவர் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடி வருகிறார். அவர் மீது போடப்பட்ட பல வழக்குகளில் அவர் விடுதலைப் பெற்றிருந்தாலும் ஒரேயொரு வழக்கு மட்டும் இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கிலும் இவருக்கு எதிராக காவல்துறையினர் நிறுத்திய இரண்டு சாட்சிகளும் பிறழ் சாட்சியங்கள் அளித்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை முழுவதுமாக நிறைவடைந்து பல மாதங்களாகிய பிறகும் எவ்வித காரணமுமின்றி பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்காமல் காலதாமதம் செய்து வருகின்றது. பின்னர் ஒரு வழியாக தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும் தீர்ப்பு அளிக்கப்படாமல் மீண்டும் சாட்சிகள் விசாரணை என்ற கேலிக் கூத்து நடை பெற்றுள்ளது. தொடர்ந்து தீர்ப்பு தேதி அளிக்காமல் நீதிபதியை மாற்றும் வேலையும் நடந்து வருகிறது. இவ்வழக்கில் இதுவரை 7 நிதிபதிகள் மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற செயல்பாடுகள் இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டு யாரும் விடுதலையாகி விடக்கூடாது என்பதில் சிறப்புக் கவனம் செலுத்தப் படுகிறதோ என்ற கருத்து மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
குணங்குடி அனிபாவிற்கு பிணையும் மறுக்கப்பட்டு வருகின்றது. நீண்ட சிறைவாசத்தின் காரணமாகவும், முதுமையின் காரணமாகவும் குணங்குடி அனிபா அவர்கள் பல்வேறு நோய்களுக்கு இலக்காகி மிகவும் பலவீனமான நிலையில் உள்ளார்.
தாமதப்படுத்தப்படும் நீதி மறுக்கப்படும் நீதியாகவும் கொடூரமான மனிதஉரிமை மீறலாகவும் உள்ளது. இந்த அநீதியை கண்டித்தும், உடனடியாக குணங்குடி அனிபா தொடர்புடைய வழக்குகளில் தீர்ப்பு வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வரும் மே 5ம் தேதி சென்னை உயர்நீதி மன்றம் நோக்கி கண்டன பேரணி நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment