அண்டை நாடுகளில் புகுந்து விமான தாக்குதல்கள் மூலமாகவும் பாஸ்பரஸ் போன்ற எரிகொள்ளிகளை வீசியும் அப்பாவி மக்களை கொன்று ஒரு மிரட்சியை ஏற்படுத்துவது இஸ்ரேலின் ஒரு பயங்கரவாத செயல் எனில் மொஸாத் எனும் உளவுப்படை மூலமாக அயல்நாட்டு தலைவர்களை கொல்வது மற்றொரு செயல்.
1991ல் ஈராக் அதிபர் சதாம் ஹூஸைனை கொல்ல முயற்சி செய்தது, 1997 ல் அம்மானில் வைத்து ஹமாஸ் தலைவர் காலித் மிஷாலை கொல்ல நடந்த முயற்சி, 1988ல் பாலஸ்தீன தலைவர் கலீல் வசீரை துனீசியாவில் வைத்து கொலை செய்தது. 1980 ல் எகிப்து நாட்டின் நியூக்ளியர் விஞ்ஞானி யஹ்யா அல் மசாதை கொலை செய்தது போன்றவற்றை குறிப்பிடலாம்.
இதற்காகவே இஸ்ரேல் ஏராளமான அதிகாரிகளுக்கு பயிற்சி கொடுத்து உலக நாடுகளில் ஊடுருவ செய்துள்ளது. அதன் தலைவனாக இருப்பவன் மிர் தகான். ஹிஸ்புல்லா இயக்க தலைவரான முக்னிய்யாவை மிக சாமார்த்தியமாக கொன்றதற்காக இவனது பதவிக்காலம் முடிந்த பிறகும் மீண்டும் அவனை மொசாத் தலைவனாக இஸ்ரேல் அரசு நீடிக்க செய்தது.
ஹமாஸ் இயக்கத்தின் எதிர்ப்பை தாக்குபிடிக்க முடியாமல் திணறும் இஸ்ரேல், அதன் தலைவர்களை கொல்லும் பொறுப்பை இந்த மிர் தகானிடம் வழங்கியது. கடந்த மாதம் துபாய்க்கு வந்த ஹமாஸ் தலைவர்களில் ஒருவரான மஹ்மூத் மப்ஹூஹை கொல்வதற்காக பல நாடுகளிலிருந்து கூலிப்படைகளை கொண்டு வந்து துபாயில் ஒரு ஹோட்டலில் வைத்து மப்ஹூஹை கொலை செய்துவிட்டு இயற்கை மரணத்தை போன்று ஒரு செட்டப்பையும் செய்துவிட்டு கொலையாளிகள் தப்பிவிட்டனர். ஆனால் அதை மிக சாமார்த்தியமாக துபாய் போலீஸ் கண்டுபிடித்து வெளியிட்டு விட்டது.
சூப்பர் மேன் என பெயர்பெற்ற இந்த மொஸாத் தலைவன் மிர் தகானால் தங்களுக்கு இத்தகைய ஒரு வெட்கக்கேடான நிலை ஏற்படும் என்று இஸ்ரேல் நினைத்திருக்கவில்லை. தாம் நினைத்தது போல இவன் ஒரு ஜேம்ஸ்பாண்ட் அல்ல என்று தற்போது புரிந்து இருக்கும்.
கொலை செய்து விட்டு தடயமில்லாமல் தனது சகாக்கள் தப்பி சென்ற போது வீரசாகசம் செய்துவிட்ட நிலையில் தகானும் எஜமானர்களும் துள்ளிகுதித்தனர். துபாய் போன்ற ஒரு சிறிய நாட்டில் நடக்கும் கொலைகளை அரசால் கண்டுபிடிக்க இயலாது என்றே மொஸாத் கருதியது. ஆனால் தடயமின்றி எங்கும் எதையும் செய்ய துணிந்த மொஸாத்தை விரல் சூப்ப செய்துவிட்டு துபாய் போலீஸ் அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் தாஹி கல்ஹான் தமீமியை ஹீரோ ஆக்கி விட்டது இந்த நிகழ்ச்சி.
விமானநிலையத்தில் இறங்கியது முதல் குற்றவாளிகளின் செயல்பாடுகள் அனைத்தையும் கேமராக்களில் பதிவு செய்ததை பார்த்து இஸ்ரேலை விட பிரிட்டன், அயர்லாந்து, பிரான்ஸ் முதலான நாடுகள் மூக்கின் மேல் விரல் வைத்து ஆச்சரியப்பட்டு போனது.
இந்நாடுகளின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி தான் குற்றவாளிகள் துபாய்க்கு வந்தனர். பிரிட்டனில் இது பற்றிய சூடு பறக்க தொடங்கி விட்டது. ஆனால் பாஸ்போர்ட் போலியானது என்று பிரிட்டன் அரசு சொல்கின்றது. போலி பாஸ்போர்ட்டுகள் பரிசோதிப்பதில் ஐரோப்பிய யூனியனிடம் பரிசு பெற்ற பிரிட்டன் தான் இந்த பாஸ்போர்ட்டுகளை பரிசோதனை செய்தததென்றும் அவை ஒரிஜினல் பாஸ்போர்ட் தான் என்றும் துபாய் போலீஸ் கண்டிப்புடன் கூறியுள்ளது.
ஹாலோகிராம் நீரெழுத்துக்களும் பயோமெட்ரிக் முத்திரையுடன் கூடியது தான் பாஸ்போர்ட். அதுவும் போலி என பிரிட்டன் கூறுமானால் அதையும் குற்றவாளிகளால் தயாரிக்க முடியுமெனில் அரசு வழங்கும் பாஸ்போர்ட்டால் என்ன பயன் என்று பிரிட்டிஷ் பத்திரிகையாளரான ராபர்ட் ஃபிஸ்கி கேள்விp எழுப்பியுள்ளார்.
தீவிரவாத செயல்களுக்கு ஐரோப்பிய பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்துவது இது முதன்முறையல்ல. 1987 ல் பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி மொஸாத் நடத்திய ஆபரேசனை தொடர்ந்து அன்றைய பிரதம மந்திரி மார்கரெட் தாச்சர் 13 இஸ்ரேலிய அதிகாரிகளை வெளியேற்றி பிரிட்டனிலுள்ள மொஸாத் அலுவலகத்திற்கு சீல் வைத்து மூடுவிழா நடத்தியது.
இனிமேல் இதுபோன்று நடக்காது என உறுதிமொழி கொடுத்ததால் மீண்டும் பிரிட்டனில் துவங்க அனுமதி வழங்கப்பட்டது. 1997 ல் அம்மானில் விஷம் தெளித்து ஹமாஸ் தலைவர் காலித் மிஷாலை கொல்ல திட்டமிட்ட மொஸாத் கூலிப்படையினர் நியூசிலாந்த் மற்றும் கனடாவின் பாஸ்போhட்டை தான் பயன்படுத்தினர்.
இரண்டு நாடுகளுடனும் பின்னர் மொஸாத் மன்னிப்பு கேட்கும் நிலை ஏற்பட்டது. மொஸாத் தலைவன் மிர் தகானை பொறுத்தவரை இது அவனுக்கு இரண்டாவது அடி. ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை தடுத்து நிறுத்தும் பொறுப்பு ஏழு வருடங்களுக்கு முன்பாக அவனிடம் கொடுக்கப்பட்டது. ஆனால் இஸ்ரேலின் கனவு எதுவும் ஈரான் விஷயத்தில் பலிக்கவில்லை. அணுஆயுத தயாரிப்பில் ஈரான் தன்னிறைவு பெற்றுவிட்டது என நஜாதி அறிவித்த சில நாட்களிலேயே துபாய் கொலையில் அகப்பட்டு அதிலும் மொஸாத்தின் துணி அவிழ்த்தெறியப்பட்டுவிட்டது.
2004ல் செச்சனிய நாட்டின் முன்னாள் அதிபரான ஸலீம்கான் பாந்திரேயை கொன்ற ரஷ்ய உளவாளிகளை கத்தார் அரசு கண்டுபிடித்து விசாரணை செய்து தண்டனை கொடுத்தது என்றாலும் இறுதியாக தண்டனையை அனுபவிக்க ரஷ்யாவிற்கே விட்டுகொடுக்கும் நிலையே ஏற்பட்டது.
ஹமாஸ் தலைவர்களில் ஒருவரான மப்ஹூஹை கொன்றவர்கள் விஷயத்தில் இதுபோன்றதொரு நடவடிக்கையை எவருமே விரும்பவில்லை. ஆனால் அதற்கு துபாய் அரசு இன்னும் துணிச்சல் பெறவேண்டும்.
அமெரிக்காவிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக கூறி பின்லாடனை தண்டிக்க நினைக்கும் அமெரிக்காவும் பாகிஸ்தானியர்கள் மும்பையில் புகுந்து தாக்கியதாக கூறி அவர்களையும் தண்டிக்க விரும்பும் இந்திய அரசும் ஹமாஸ் தலைவரை இன்னொரு நாட்டில் புகுந்து கொலை செய்த இஸ்ரேலியர்களை தண்டிக்க கோருமா?
உலகின் எப்பகுதியிலுள்ளவர்களுக்கும் தண்டனை வழங்க சக்தி பெற்றதாக கூறிக்கொள்ளும் ஐக்கிய நாடுகளின் சபையும் சர்வதேச நீதிமன்றமும் குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வழங்குமா? அல்லது தண்டனை வழங்க இருக்கும் துபாய் அரசுடன் ஒத்துழைக்குமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
No comments:
Post a Comment