கல்வி நிறுவனங்கள் மற்றும் பணியிடங்களில் முஸ்லிம்களுக்கு 4 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் ஆந்திர அரசின் சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
கல்வி நிறுவனங்கள் மற்றும் பணியிடங்களில் முஸ்லிம்களுக்கு 4 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ஆந்திர மாநில அரசு உருவாக்கியது. இதன் அடிப்படையில் கடந்த 2007ம் ஆண்டில் அரசாணையும் பிறப்பித்தது.
இதை எதிர்த்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த ஆந்திர உயர்நீதிமன்ற பெஞ்ச் ஆந்திர அரசின் சட்டம் செல்லாது என அறிவித்து, அரசு உத்தரவுக்கு தடை விதித்தது.
உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவை எதிர்த்து ஆந்திர அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 22ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இம்மனுவை விசாரணைக்கு ஏற்றது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் இன்று இம்மனு விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதிகள் ஜே.எம்.பாஞ்சால், பி.எஸ்.சௌகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக இம்மனு இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்கு பின் நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், முஸ்லிம்களுக்கு 4 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் ஆந்திர அரசின் சட்டம் செல்லும் என குறிப்பிட்டனர்.
No comments:
Post a Comment