குஜராத் வன்முறைகள் தொடர்பாக சாட்சியம் அளிக்க வரும்படி, அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு, சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு அனுப்பிய சம்மனுக்கு இணங்கி வருகிற 27ம் தேதி மோடி விசாரணைக்குழு முன் ஆஜராகிறார்.
குஜராத்தில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பின் வன்முறைகள் நிகழ்ந்தன. இதில், ஏராளமானோர் பலியாயினர். இந்த வன்முறைகள் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ளது. இந்தக் குழு, குஜராத் முதல்வர் மோடிக்கு சம்மன் அனுப்பியது. அதில், மார்ச் 21ம் தேதி குழு முன் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. எனவே 21ம் தேதி மோடி ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்று அவர் விசாரணைக்குழு முன் ஆஜராகாததால் அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுபற்றி நரேந்திர மோடியின் வக்கீல் மகேஷ் ஜெத்மலானியிடம் கேட்டதற்கு வருகிற 27-ந் தேதி நரேந்திரமோடி சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்று கூறினார். மேலும் அவர் கூறும்போது, நரேந்திரமோடி கடந்த 21-ந்தேதி ஆஜராகும்படி விசாரணை குழு சம்மன் எதுவும் அனுப்பவில்லை. 27-ந்தேதி ஆஜராகும்படிதான் சம்மன் வந்துள்ளது. எனவே 27-ந்தேதி அவர் ஆஜர் ஆவார். விசாரணை குழு கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் அவர் பதில் அளிப்பார் என்றார்.
குஜராத் வன்முறையின் போது, ஆமதாபாத்தில் குல்பர்க்கா சொசைட்டி பகுதியில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ஈஷன் ஜாப்ரே என்பவர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார். அவரின் மனைவி ஜாகியா ஜாப்ரே கொடுத்த புகாரின் அடிப்படையில், மோடிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment